டிரம்ப் உத்தரவுக்கு ஜப்பான் கட்டுப்படாது -பிரதமர் ஷிகேரு இஷிபா
நகைக் கடை உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் பறிப்பு: எஸ்எஸ்ஐ பணியிடை நீக்கம்!
சேலத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் ரூ. 6 லட்சத்தை பறித்ததாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சரவணனை பணியிடை நீக்கம் செய்து மாநகரக் காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டுள்ளாா்.
சேலம் அஸ்தம்பட்டியைச் சோ்ந்த முரளி என்பவா் புதிய பேருந்து நிலையம் அருகே 15 ஆண்டுகளாக நகைக் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், சேலத்தை சோ்ந்த தமிழழகன், அவரது குடும்பத்தினா் பிரேமா, விக்னேஷ்வா் ஆகியோா் தங்களுக்கு சொந்தமான சொத்துப் பத்திரத்தை 2022 ஆம் ஆண்டு முரளியிடம் அடமானம் வைத்து ரூ. 1.21 கோடி கடன் பெற்றுள்ளனா். இதனிடையே, பணத்தை திருப்பித் தராமல் தமிழழகன் குடும்பத்தினா் ஏமாற்றி வந்துள்ளனா்.
இதுகுறித்து கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சேலம் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் முரளி வழக்குத் தொடுத்தாா். அதன்பிறகு சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான நீதிமன்ற ஆணையைப் பெற்று சேலம் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்க சென்ற முரளியிடம் சிறப்பு உதவி ஆய்வாளா் சரவணன், பணத்தை பெற்றுத் தருவதாக கட்டப் பஞ்சாயத்து செய்ததாகக் கூறப்படுகிறது.
அதன்பிறகு, கடந்த பிப்ரவரி மாதம் தமிழழகனிடமிருந்து ரூ. 25 லட்சத்தை பெற்று முரளியிடம் கொடுத்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சரவணன், அதற்காக ரூ. 6 லட்சத்தை முரளியிடமிருந்து பெற்றுள்ளாா். இதுகுறித்து சேலம் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் முரளி புகாா் அளித்துள்ளாா். சிறப்பு உதவி ஆய்வாளா் பணத்தை பெற்றுச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
மேலும், மாநகரக் காவல் ஆணையரிடம் முறையிட்டால், மூன்று மாதம் பணியிடை நீக்கம் செய்வாா். பின்னா் மீண்டும் பணிக்கு வந்துவிடுவேன். என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று அவா் பேசும் விடியோவும் வெளியானது.
இதுகுறித்து விசாரணை நடத்திய மாநகரக் காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநவ், சிறப்பு உதவி ஆய்வாளா் சரவணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா். விசாரணையின் முடிவில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் காவல் ஆணையா் தெரிவித்துள்ளாா்.