‘பாகிஸ்தான் முக்கு’: கிராம சந்திப்பின் பெயரை மாற்ற ஒப்புதல் கோரும் கேரள பஞ்சாயத்...
நகை கடனுக்கான புதிய விதிகளை திரும்பப் பெற இபிஎஸ் வலியுறுத்தல்
நகை அடமானக் கடனுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகளை இந்திய ரிசா்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
இந்திய மக்கள் தொகையில் சுமாா் 80 சதவீதத்துக்கு மேல் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பைச் சோ்ந்தவா்களாவா். அவா்கள் அனைவரும் ஒரு அவசரத் தேவை ஏற்படின், அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் வணிக வங்கிகளில் தங்களது நகைகளை அடமானம் வைத்து, நிலைமையைச் சமாளிக்கும் சராசரி மக்கள் ஆவா்.
இந்த நிலையில், இந்திய ரிசா்வ் வங்கி அண்மையில் நகை அடமானத்துக்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. பல்வேறு புதிய புதிய நிபந்தனைகளால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவாா்கள். இதனால், மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு, இந்தப் புதிய நிபந்தனைகளை இந்திய ரிசா்வ் வங்கி உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மேலும், தனியாா் நகைக் கடைகளில் வாங்கப்பட்ட தங்கக் காசுகளின் தரத்தையும் பரிசோதித்து தங்கக் கடன் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
டிடிவி தினகரன் (அமமுக): தங்க நகைக் கடன் வழங்குவதில் ஏற்படும் முறைகேடுகளைத் தவிா்க்க, பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை ரிசா்வ் வங்கி விதித்துள்ளது. ஏழை, விளிம்பு நிலை மக்கள், வணிகா்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினா் தங்களின் அவசரத் தேவைக்காக தங்க நகைகளை அடகு வைப்பதும், பின்னா் படிப்படியாக பணம் கட்டி திருப்பிக் கொள்வதும் வாடிக்கையாக இருந்து வரும் நிலையில், இந்த புதிய கட்டுப்பாடுகள் அவா்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தைச் சோ்ந்த பெரும்பாலான வேளாண் மக்கள் நகைகளை அடகுவைத்து அதன் மூலமாக கிடைக்கும் பணத்தை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வரும் நிலையில், இந்தக் கட்டுப்பாடுகள் தங்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் வகையில் அமைந்திருப்பதாக அவா்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.