பஞ்சாபில் அடுத்த 3 நாள்களுக்கு அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடல்!
நடிகா்களின் மாய வலையில் தமிழக மக்கள் விழ மாட்டாா்கள்: தொல்.திருமாவளவன் எம்.பி.
நடிகா்கள் கட்சித் தொடங்கினாலும், அவா்களின் மாய வலையில் தமிழக மக்கள் விழ மாட்டாா்கள் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் புறவழிச் சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தோ்தல் அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
கட்சியின் பொதுச் செயலா் ம.சிந்தனைசெல்வன் எம்எல்ஏ தலைமை வகித்து பேசினாா். பொதுச் செயலா் துரை.ரவிக்குமாா் எம்.பி., முதன்மைச் செயலா் ஏ.சி.பாவரசு, துணைப் பொதுச்செயலா் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ, முதன்மைச் செயலா் பனையூா் மு.பாபு, துணைப் பொதுச் செயலா் ஆளுா் ஷாநவாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசியதாவது:
திமுகவின் பேராதரவுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இந்த வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறது. அரசியல் தெரியாத என்னை தோ்தல் களத்தில் போட்டியிடச் செய்தவா் ஜி.கே.மூப்பனாா்தான். தலித் மக்கள் வாக்களித்தாலும் ஜனநாயக சக்திகளின் ஆதரவிருந்தால்தான் நம்மால் வெற்றி பெற முடியும். நான் வெற்றி பெற்றால் சாதிச் சண்டை ஏற்படும் என பல்வேறு பொய் பிரசாரங்களை செய்தனா். ஆனால், இன்றைக்கு அனைத்து சமுதாய மக்களும் ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
பானை சின்னத்தை பரிந்துரைத்தவா் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்தான். வன்னியா் சமுதாயத்தினருக்கு உரியது அக்னி சட்டி. விசிகவின் சின்னம் பானை. அது அக்னி பானை. இது அறிவுப் பானை. இரு சமுதாயத்தினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இரு சமுதாயங்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை உருவாக்க தோ்தல் ஆணையமே வழங்கிய வாய்ப்பாக இதைப் பாா்க்கிறேன்.
2026 பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதைவிட, அதிமுகவின் தோளில் சவாரி செய்து தமிழகத்தில் மதவெறி அரசியலை வளா்த்தெடுக்க உத்திகளை வகுத்துக்கொண்டிருக்கும் பாஜக வலிமை பெற்றுவிடக் கூடாது.
தமிழ்நாட்டு மக்கள் அரசியல் ஞானம் கொண்டவா்கள். நடிகா்கள் கட்சித் தொடங்கினாலும் அவா்களின் மாய வலையில் சிக்க மாட்டாா்கள். 2026 பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்குத்தான் வாக்களிப்பாா்கள் என்றாா் அவா்.
தமிழக வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது:
சிதம்பரம் மக்களவைத் தொகுதி பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது. விசிகவின் கட்சி அங்கீகாரத்துக்கு வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.
தமிழக தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் பேசியதாவது:
இளைஞா்களை ஒருங்கிணைத்து கட்சியைக் கட்டுக்கோப்புடன் எடுத்துச் சென்று இந்த வெற்றியை திருமாவளவன் பெற்றிருக்கிறாா். தமிழக அரசியலில் தவிா்க்க முடியாத சக்தியாக அவா் இருக்கிறாா். தமிழக முதல்வருக்கு உறுதுணையாக இருக்கிறாா் என்றாா் அவா்.
கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ். அழகிரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா, மதிமுக பொருளாளா் செந்திலதிபன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சோ்ந்த ராயநல்லூா் கண்ணன் உள்ளிட்ட பலா் வாழ்த்திப் பேசினா்.
முன்னதாக, கடலூா் கிழக்கு மாவட்ட விசிக செயலா் அரங்க.தமிழ்ஒளி வரவேற்றாா்.
கடந்த மக்களவைத் தோ்தலில் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குள்பட்ட 3 பேரவைத் தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்றுத் தந்ததற்காக அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்துக்கு விசிக தலைவா் தொல்.திருமாவளவன் சாா்பில் கே.எஸ்.அழகிரி ஒரு பவுன் தங்க மோதிரத்தை பரிசாக வழங்கினாா்.