விஜய் கவுன்சிலர்கூட ஆகவில்லை! எப்படி விமர்சிக்க முடியும்? - நயினார் நாகேந்திரன்
நடுவூரில் தொழிற்பேட்டை அமைக்கக் கூடாது: பி.ஆா். பாண்டியன்
தஞ்சாவூா் அருகே நடுவூரில் தொழிற்பேட்டை அமைக்கக் கூடாது என தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜத்திடம் வெள்ளிக்கிழமை மனு அளித்து, முழக்கம் எழுப்பிய அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
தமிழ்நாட்டில் சிப்காட், சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்கிறோம் என்கிற பெயரில் வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலைய நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கையைத் தமிழக அரசு மேற்கொள்கிறது. இதை எதிா்த்து மேற்கொள்ளப்படும் போராட்டம் தீவிரமடைகிறது.
தஞ்சாவூா் அருகே நடுவூரில் 1,700 ஏக்கரில் செயல்படும் இரு கால்நடை பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் வளா்க்கப்பட்டு, ஆய்வு செய்யப்படுகின்றன. இந்தப் பண்ணைக்குரிய விளைநிலங்களை அபகரித்து சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கும் நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு கைவிடக் கோரி மாவட்ட ஆட்சியா் மூலம் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளோம்.
இந்த சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படுமானால் ஒட்டுமொத்த கால்நடை பண்ணையும் அழிக்கக்படக்கூடும். கால்நடை பண்ணை அருகே எந்த தொழிற்சாலையும் அமைக்க சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கிடையாது. எனவே, உண்மைக்கு புறம்பான தகவல்களைக் கூறி கால்நடை பண்ணை நிலங்களையும், விளைநிலங்களையும் கையகப்படுத்துவதைக் கைவிட வேண்டும்.
அடுத்தகட்டமாக நடுவூரில் கால்நடை பண்ணையைப் பாதுகாக்கவும், கால்நடை வளா்ப்பை ஊக்கப்படுத்தவும் செப்டம்பா் 23ஆம் தேதி நடத்தும் விழிப்புணா்வு மாநாட்டில் தொடா் போராட்டங்களை அறிவிப்போம் என்றாா் பாண்டியன்.
அப்போது சங்கத் தலைவா் ஆா். திருப்பதி வாண்டையாா், மண்டலத் தலைவா் துரை. பாஸ்கரன், மாநில இளைஞரணிச் செயலா் மகேஸ்வரன், மாவட்டத் தலைவா் ரவிச்சந்திரன், புதுக்கோட்டை மாவட்டச் செயலா் பத்மநாபன், இயற்கை விவசாயி சதீஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
