நண்பரை தாக்கிய புகார்: வங்கதேச கிரிக்கெட் வீரர் மீது வழக்குப் பதிவு!
வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது தன்னை கொடூரமாகத் தாக்கியதாக சிறுவயது நண்பர் ஒருவர் புகாரளித்துள்ள சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தின் மிர்புரில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் தஸ்கின் அகமதுவின் நண்பரான ஷிஃபதுர் ரஹ்மான் சௌரவ் என்பவர் வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
அந்தப் புகாரில் மிர்புரில் சினிமா ஹால் முன்னதாக வைத்து தஸ்கின் அகமது தன்னைக் கடுமையாகத் தாக்கியதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் ஊடகக் குழுத் தலைவர் இப்திகார் அகமது கூறுகையில், “இந்தப் புகார் குறித்து விசாரித்து வருகிறோம். முழுமையான விசாரணைக்குப் பின்னரே முடிவு எட்டப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தீவிரமான நிலையில், தஸ்கின் அகமது தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “உங்களிடன் ஒன்று வேண்டிக் கொள்கிறேன். தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம்.
இதுபோன்ற தவறான தகவல்களை நீங்கள் நம்பக் கூடாது. இது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் மரியாதை குறைவானதாகும். உண்மை ஒரு போதும் பொய்யாகாது. நீங்களும் உண்மையின் பக்கம் நிற்பீர்கள் என நம்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.