நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த துடிக்கும் மாநில விரோதிகள்: மு.க.ஸ்டாலின்
தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த விரோதிகள் துடிப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவருவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று முயற்சித்தார்.
ஆனால், முன்பே அனுமதி பெறாததால் அனுமதிக்க முடியாது என்று பேரவைத் தலைவர் அப்பாவு நிராகரித்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், ஒருநாள் இடைநீக்கம் செய்து அவர்களை வெளியேற்ற அப்பாவு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
”தமிழ்நாட்டில் பொது அமைதி நிலவுகிறது. பெரிய சட்டம் - ஒழுங்கு பிரச்னையின்றி மக்கள் அமைதியாகவும் இணக்கமாகவும் வாழ்கின்றனர். இதனால்தான் முதலீடுகள், தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் என தமிழகம் முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.
இதனை தாங்கிக் கொள்ள முடியாத மாநில விரோத சக்திகள், தமிழ் மக்கள் விரோத சக்திகள், அங்கொன்றும் இங்கொன்றும் நடைபெறும் கொலை, கொள்ளை நிகழ்வுகளை ஊதிப் பெருசாக்கி, இரவுபகலாக பணிபுரியும் தமிழக காவல்துறைக்கு இழுக்கு ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்கு பிரதான எதிர்க்கட்சியும் துணைபோகிறது.
தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த துடிக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் எத்தனை கலவரங்கள் ஏற்பட்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதுபோன்று தற்போது நடைபெறுவதில்லை. தவறு செய்பவர் ஆளுங்கட்சியினராக இருந்தாலும் வழக்குப் பதிந்து, கைது செய்யப்படுகிறார்கள்.
சில சமயங்களில் நடைபெறும் தொடர் சம்பவங்களால் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டதாக மக்களிடம் வீண் புரளியைக் கிளப்பாமல் எதிர்க்கட்சித் தலைவரும், அவர் கூட்டணி வைக்கத் துடிக்கும் கட்சியினரும் ஆக்கப்பூர்வ அரசியல் செய்ய முன்வாருங்கள்.” எனத் தெரிவித்தார்.