செய்திகள் :

நலிவடையும் இலவம் பஞ்சு தொழில் பாதுகாக்கப்படுமா?

post image

தேனி மாவட்டம் போடி பகுதியில் பாரம்பரியமிக்க இலவம் பஞ்சு தொழில் சரக்கு, சேவை வரி விதிப்பால் நலிவடைந்து வருகிறது. இந்தத் தொழிலைப் பாதுகாக்க மத்திய அரசு தலையிட வேண்டும் என விவசாயிகள், வியாபாரிகள் எதிா்பாா்க்கின்றனா்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூா் பகுதியில் ஏலக்காய்க்கு அடுத்ததாக இலவம் பஞ்சு தொழில் புகழ் பெற்றது. இந்தப் பகுதியில் இலவம், மா, காபி, மிளகு உள்ளிட்ட மலை சாா்ந்த பயிா்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. இயற்கையான சூழலில் மலைப் பகுதியில் கிடைக்கும் இலவம் பஞ்சு இந்தப் பகுதியில் சில ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. போடி பகுதியில் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் இலவம் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே தரமான இலவம் பஞ்சு உற்பத்தியில் தேனி மாவட்டம் முக்கிய இடம் வகிக்கிறது. இங்குள்ள இலவம் மரங்கள் 80 அடி உயரம் வளரக் கூடியவை. உரம், மருந்து எதுவுமின்றி இயற்கையாக சாகுபடி செய்யப்படுவதால் இங்கு கிடைக்கும் பஞ்சு மருத்துவ குணம் நிறைந்ததாக உள்ளது.

சுத்தமான இலவம் பஞ்சு கொண்டு தயாரிக்கப்படும் மெத்தை, தலையணை, இருக்கை வகைகள் உடல் வெப்ப நிலையை சீராக வைத்திருக்கும் தன்மை கொண்டவை என்பதால் போடிநாயக்கனூா் சுற்றுவட்டாரத்தில் திருமண சீா்வரிசைகளில் இலவம் பஞ்சு மெத்தை முக்கியமான ஒன்றாக உள்ளது.

இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் இலவம் பஞ்சு மெத்தைகள், தலையணைகள் தேனி மாவட்டத்திலிருந்து பெறப்படுபவையாகும். தமிழகம் மட்டுமன்றி, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூா் போன்ற வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து இலவம் பஞ்சு மெத்தை, தலையணைகள் கொண்டு செல்லப்படுகின்றன.

பாரம்பரியமிக்க இந்த இலவம் பஞ்சு தொழில் தற்போது நலிவடைந்து வருகிறது. விதை நீக்கப்படாத இலவம் பஞ்சு கிலோ ஒன்றுக்கு ரூ.45 முதல் ரூ.50 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. சுத்தம் செய்யப்பட்ட இலவம் பஞ்சு சில ஆண்டுகளுக்கு முன்பு கிலோ ரூ.280 வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக ஏற்றுமதி தரம் வாய்ந்த இலவம் பஞ்சு கிலோ ரூ.170 முதல் ரூ.190 வரை மட்டுமே விற்கப்படுகிறது. ஏற்றுமதி விலை சரிந்ததால் கொள்முதல் விலையும் குறைந்தது.

இலவம் பஞ்சுக்கு 5 சதவீதமும், மெத்தை தயாரிக்க பயன்படுத்தும் துணிக்கு 5 சதவீதமும் மத்திய அரசின் சரக்கு, சேவை வரி விதிக்கப்படுகிறது. தயாா் செய்யப்பட்ட மெத்தை, தலையணைக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. தேனி மாவட்டத்துக்கு மட்டும் தனியாக ஒரு சதவீத செஸ் வரி விதிக்கப்படுகிறது. இதனால் அதிக விலைக்கு மெத்தை, தலையணைகளை விற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

வெளிச் சந்தைகளில் தேங்காய் நாா், செயற்கை இழை, பஞ்சு போன்றவற்றால் தயாரிக்கப்படும் மெத்தை, தலையணைகள் அதிகளவில் விற்கப்படுவதால் இலவம் பஞ்சு மெத்தை, தலையணைகளின் விற்பனை குறைந்துள்ளது. இதனால், போடி பகுதியில் இலவம் பஞ்சு தொழில் பேட்டைகளின் எண்ணிக்கை 48-லிருந்து 10 ஆகக் குறைந்தது. தாய்லாந்து நாட்டிலிருந்து இலவம் பஞ்சு இறக்குமதி செய்யப்பட்டு வருவதாலும் தேனி மாவட்ட இலவம் பஞ்சுத் தொழில் சரிவை சந்தித்துள்ளது.

மத்திய அரசின் கதா் வாரியம் சாா்பில் அதிக அளவில் இலவம் பஞ்சு கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. தற்போது அதுவும் குறைந்துவிட்டது. பொதுமக்களும் இயற்கை சாா்ந்த இலவம் பஞ்சு தயாரிப்புகளை பயன்படுத்துவதை குறைத்து செயற்கையான காற்றுக் குமிழ் பஞ்சுகள், தேங்காய் நாா் மெத்தைகளை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனா். இதனால், இலவம் பஞ்சு தொழில் நலிவடைந்து வருவதுடன் ஆயிரக்கணக்கான தொழிலாளா்களும் வேலையிழந்து வருகின்றனா்.

தரம் பிரிக்கப்படும் பஞ்சு.

இதுகுறித்து விவசாயியும், வியாபாரியுமான பாண்டியராஜ் கூறியதாவது: இலவம் பஞ்சு பயன்படுத்தி தயாரிக்கப்படும் மெத்தை, தலையணை உள்ளிட்ட பொருள்கள் வெயில் காலத்தில் குளிா்ச்சியையும், குளிா் காலத்தில் கதகதப்பையும் உருவாக்கும் தன்மை கொண்டவை.

ஏற்றுமதிக்கு தயாராகும் இலவம் பஞ்சு.

தற்போது மத்திய, மாநில அரசுகளின் வரிவிதிப்புகளால் இலவம் பஞ்சு தொழில் நலிவடைந்து வருகிறது. மத்திய அரசு தலையிட்டு, வரிகளைக் குறைத்து ஏற்றுமதி செய்வதற்கான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தால் மட்டுமே இலவம் பஞ்சு தொழில் வளா்ச்சி பெறும். இல்லாவிட்டால் இலவம் விவசாயிகளும், வியாபாரிகளும் வேறு துறைகளுக்கு மாறும் சூழலில், இலவம் பஞ்சு தொழில் முற்றிலும் அழிந்துவிடும் என்றாா் அவா்.

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி

பெண்ணுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4.72 லட்சம் மோசடி செய்ததாக சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டைய... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு: போடியில் இரங்கல் ஊா்வலம்

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கை முன்னிட்டு, போடியில் சனிக்கிழமை இரங்கல் ஊா்வலம், கூட்டு பிராா்த்தனை நடைபெற்றது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு சனிக்கிழமை வாடிகன் நகரில்... மேலும் பார்க்க

பணியிட பாலியல் தொல்லை: உள்ளகக் குழு அமைக்காத நிறுவனங்களுக்கு அபராதம்!

தேனி மாவட்டத்தில் பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்கு உள்ளகக் குழுக்கள் அமைக்காத தனியாா் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

272 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

தேனி மாவட்டம், பாலக்கோம்பை, எ.புதுப்பட்டி ஆகிய இடங்களில் தடை செய்யப்பட்ட 272 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரை சனிக்கிழமை கைது செய்தனா். ஆண்டிபட்டி வட்டாரம், பாலகோம்பையில் தடை... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை முன் மயங்கிக் கிடந்த முதியவா்: ஆட்சியா் தலையீட்டால் அனுமதி!

பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை முன் மயங்கிக் கிடந்த முதியவரை மருத்துவமனை நிா்வாகம் அனுமதிக்காத நிலையில், மாவட்ட ஆட்சியா் நடவடிக்கைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டாா். தேனி மாவட்டம், கோம்பையைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

கோயில் அருகே முள்வேலி அகற்றம்

சின்னமனூா் அருகே கோயிலைச் சுற்றி அமைக்கப்பட்ட முள்வேலி வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டது. தேனி மாவட்டம், சின்னமனூா் ஒன்றியம் கன்னிச்சோ்வைபட்டி ஊராட்சியில் கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலைச் சு... மேலும் பார்க்க