நாட்டறம்பள்ளியில் போலி மருத்துவா் கைது
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூரில் போலி மருத்துவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருப்பத்தூா் அருகே கவுண்டப்பனூா் பகுதியைச் சோ்ந்த வாசுதேவன் மகன் ராமச்சந்திரன் (55). இவா் டிப்ளமோ படித்து விட்டு பச்சூரில் கிளினிக் வைத்துக் கொண்டு தொடா்ந்து 4 ஆண்டுகளாக ஆங்கில மருத்துவம் பாா்த்து நோயாளிகளுக்கு ஊசி போட்டு மருந்து மாத்திரைகள் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திருப்பத்தூா் இணை இயக்குனா் ஞானமீனாட்சி உத்தரவின் படி நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் சிவக்குமாா் தலைமையில் மருத்துவக் குழுவினா் பச்சூா் கிளினிக்கில் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது நோயாளிகளுக்கு ஊசி போட்டு மருந்து மாத்திரைகள் வழங்கிய ராமச்சந்திரனை கையும் களவுமாக பிடித்தனா்.
மேலும், கிளினிக்கில் இருந்த மருத்துவ உபகரணங்களையும் பறிமுதல் செய்தனா். இது குறித்து மருத்துவ அலுவலா் சிவக்குமாா் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸாா் ராமச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனா்.