மும்பை மோனோரயில் விபத்து: ரயிலில் இருந்த 400-க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக ம...
நாமக்கல்: கிட்னி விற்பனையைத் தொடர்ந்து கல்லீரல் விற்பனை; பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த அதிர்ச்சி தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கிட்னி விற்பனையைத் தொடர்ந்து கல்லீரல் விற்பனை நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அலமேடு பகுதியைச் சேர்ந்தவர் தேவி. இவரது கணவர் பிரிந்து சென்ற நிலையில், 18 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
சாயப்பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்த தேவிக்கு, போதிய வருமானம் இல்லாததால் அக்கம்பக்கத்தவர்களிடம் கடன் வாங்கினார். ஒரு கட்டத்தில் கடன் அதிகரித்த நிலையில், ஈரோட்டில் உள்ள மணிமேகலை என்ற பெண் புரோக்கரிடம் தனது கிட்னியை விற்பதாகவும், அதற்கு ஈடாகப் பணம் பெற்றுத்தரும்படியும் கேட்டுள்ளார்.
இதையடுத்து, கடந்த 2022ம் ஆண்டு தேவியின் உடல் உறுப்புகள் பரிசோதிக்கப்பட்டு, சட்டவிரோதமாக கிட்னியை விற்பதற்குப் போலி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டது.

பின்னர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தேவியை, அங்குள்ள மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இதில், அப்போது கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக வந்த நோயாளிக்கு, தேவியின் ரத்த வகை ஒத்துப்போகவில்லை. ஆனால், தனது கடன் சுமை குறித்துத் தெரிவித்த தேவி, எப்படியாவது கிட்னியை எடுத்துக் கொண்டு பணத்தைத் தரும் படி கேட்டுள்ளார்.
அதே நேரத்தில், மருத்துவமனையில் கல்லீரல் அறுவை சிகிச்சைக்காக, அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு நோயாளிக்குக் கல்லீரல் தேவைப்பட்டுள்ளது. இதனால் தேவியின் ஒப்புதல் பெற்று, அறுவை சிகிச்சை மூலம் அவரது கல்லீரலின் ஒரு சிறு பகுதி அறுத்து எடுத்து, நோயாளிக்குப் பொருத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்காக தேவிக்கு மருத்துவமனையிலிருந்து ரூ.5.50 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தேவி, மீண்டும் வேலைக்குச் செல்லவில்லை. இதனிடையே, சிகிச்சைக்குப் பின்னர் அவருக்கு அடிக்கடி உடல் சோர்வும், அசதியும் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த 2022 நவம்பர் மாதம், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் எண்டோஸ்கோபி சோதனை செய்து பார்த்ததில், அறுத்து எடுக்கப்பட்ட தேவியின் கல்லீரல் மீண்டும் வளர்ந்து முழு நிலையை எட்டவில்லை என்பது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து தேவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பல மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றும் அவரது உடல்நிலை தேறவில்லை. வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டில் ஓய்விலிருந்து வரும் தேவி, மீண்டும் வறுமை நிலையை அடைந்துள்ளார். அவரது குழந்தைகளின் எதிர்கால கல்வி, வாழ்க்கை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் தேவி அச்சமடைந்துள்ளார்.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட தேவி கூறுகையில், "அதிக அளவில் கடன் இருந்ததால் கிட்னி கொடுக்க விருப்பம் தெரிவித்தேன். சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். கிட்னி தேவைப்பட்ட நோயாளிக்கு எனது கிட்னி பொருந்தவில்லை, பரிசோதனைக்கு ரூ. 1.50 லட்சம் வரை செலவானது. கிட்னிக்குப் பதிலாக கல்லீரலை கொடுத்தால் பேசிய பணத்தைத் தருவதாகத் தெரிவித்தனர்.
கல்லீரல் அறுவை சிகிச்சை பின்னர் மீண்டும் வளர்ந்து விடும் என்று கூறியதால் சம்மதித்தேன். கல்லீரல் ஒரு பகுதி அறுத்து எடுக்கப்பட்டது. ரூ.5.50 லட்சம் ப்ரோக்கர் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தேன். மருத்துவமனையில் சோதனை செய்து பார்த்தபோது கல்லீரல் மீண்டும் வளரவில்லை எனக் கூறி விட்டார்கள். எனது குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு அரசு உதவ வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.