மனு கொடுக்க சென்ற விஏஓ-க்களை ‘வெளியே போ’ எனக் கூறிய உதவி ஆட்சியர்.! முற்றுகை போர...
நாம் ஏன் நேர்மையை பல இடங்களில் தியாகம் செய்கிறோம்?- மறந்துபோன பண்புகள் -1
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
மறந்துபோன பண்புகள் -1 -- நேர்மை:
நாகரீகம் வளர்ந்து வருகிறது என்கிறார்கள், வாழ்க்கை முறை மாறிக்கொண்டே இருக்கிறது. மேலும் மேலும் வளர்ச்சியை நோக்கி நாம் நகர்ந்து கொண்டே இருக்கிறோம் ( வளர்ச்சி என்றுதான் சொல்கிறார்கள்). இவ்வளவு வளர்ச்சியும், மாற்றமும் நல்லதுதான், ஆனால் பெரும்பாலான மனிதர்களிடம் நல்ல பண்புகள் குறைந்து கொண்டே வருகிறதே! தொழில்நுட்பத்தில் மட்டும் வளர்ந்து விட்டால் போதுமா?
நம்மை சிறந்த மனிதர்களாக மாற்ற, ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க உதவும் முக்கிய தார்மீக விழுமியங்களை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம். அவற்றில் முக்கியமான பண்புகளை காண்போம் வாருங்கள்,

1. நேர்மை:
இப்போது எல்லாம் யார் நேர்மையாக இருக்கிறார்கள், எப்படி ஒருவரை ஏமாற்றலாம், எப்படி பணம் பறிக்கலாம் என்றுதானே பலர் சிந்திக்கின்றனர், காலம் மாறிவிட்டது. இப்படி சிலர் கூற நீங்கள் கேட்டிருக்கலாம், ஏன் நீங்களே உங்கள் வாழ்க்கையில் இந்த வசனத்தை கூறி இருக்கலாம்..
நம் தினசரி வாழ்க்கையில் பல இடங்களில் நாம் சர்வ சாதாரணமாக பொய் சொல்கிறோம், "எப்படி சமாளிச்சேன் பாத்தியா" என்று பெருமையாக பேசுகின்றோம்.
சரி, நாம் ஏன் நேர்மையை பல இடங்களில் தியாகம் செய்கிறோம்?
முதலில், நம் வசதிக்காக நாம் பொய் கூறுகின்றோம், உண்மையை கூறினால் சில விஷயங்கள் நமக்கு தாமதமாக கிடைக்கும் என்பதற்காக நாம் உண்மையை மறைக்கிறோம்.
இரண்டாவது, விளைவுகளை பற்றிய பயம் நம்மிடம் இருக்கிறது, நாம் செய்த தவறுகளை மறைக்க பார்க்கிறோம். நாம் நேர்மையாக நடந்து கொண்டால், நம் தவறுக்காக மற்றவர்கள் நம்மை என்ன சொல்வார்களோ என்ற எண்ணம் நம்முள் எழுகிறது. அலுவலகத்தில் முதலாளியிடம் ஊழியர்கள் பொய் சொல்கிறார்கள், மாணவர்கள் ஆசிரியரிடம் பொய் சொல்கிறார்கள், குழந்தைகள் பெற்றோர்களிடம் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்..

மூன்றாவது, சமூக அழுத்தத்தினாலும் நாம் பொய் சொல்கிறோம், நம்மை பணக்காரர்களாக காட்டிக்கொள்ள, உன்னை விட நான் சளைத்தவன் இல்லை என்பதை காட்ட, லைக்ஸ் மற்றும் வியூஸ்காக சமூக வலைத்தளங்களில் போலியான பதிவுகளை பதிவு செய்தல், இது போல, நான் சிறந்தவன் என்பதை காட்டிக்கொள்ள நேர்மையை தொலைத்துவிடுகிறோம்.
ஆனால், நாம் பொய் சொல்கிறோம் என்ற குற்ற உணர்வே நம்முள் எழுவதில்லை "போறபோக்குல ஒரு பிட்ட போட்டுட்டு போயிட்டே இருப்போம்ல" என்று பெருமையாக கூறும் அளவிற்க்கு பொய் நம் வாழ்வில் கலந்து விட்டது.
பிரபல நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில், வேலைக்காக விண்ணப்பிக்கும் நபர்களில் எழுபது சதவீதத்துக்கும் அதிகமானோர் தங்களுக்கு இல்லாத திறமைகளை இருப்பது போலவும் , தாங்கள் இதுவரை செய்யாத வேலைகளை செய்ததாகவும் பதிவிடுகின்றனர் என்கிறது. வேலைவாய்ப்பு போன்ற முக்கியமான விஷயங்களில் கூட நேர்மையின்மை எவ்வாறு இயல்பாக்கப்படுகிறது என்பதை இது காட்டுகிறது.
நேர்மை ஏன் முக்கியமானது?
உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு, உங்கள் உறவுகளுக்கு, நண்பர்களுக்கு, ஏன் உங்களுக்கே உங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட வேண்டுமென்றால் நீங்கள் ஒரு நேர்மையான மனிதராக இருக்க வேண்டும்.
மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும் என்பார்கள், அதுபோல நம் தவறுகளை மறைத்து மறைத்து வைத்துக் கொண்டும், உண்மையை மறைக்க பல பொய்களை கூறிக்கொண்டும் இருந்தால், எப்போது மாட்டிக்கொள்வோம் என்ற ஒருவித பயத்துடனே நாம் வாழ வேண்டும். உண்மையானவர்களுக்கு அந்த பயம் இருப்பதில்லை.
பொய் குறுகிய காலத்திற்கு வேண்டுமானால் பயனளிப்பது போல தோன்றலாம் , ஆனால் நேர்மை நீண்ட காலத்திற்கு பயனளிக்கும்.
நாம் எப்படி நேர்மையாக இருப்பது:
நேர்மை என்பது பொய் சொல்லாமல் இருப்பது மட்டுமல்ல, நம் செயல்களில், நம் வார்த்தைகளில், நம் நோக்கங்களிலிலும் உண்மையாக இருப்பதை பற்றியது.
நான் எனக்கும் மற்றவர்களுக்கும் உண்மையாக இருக்கிறேனா என்ற கேள்வியை உங்களிடம் கேளுங்கள்.

எந்த தருணங்களில் எல்லாம் நீங்கள் நேர்மையற்றவராக நடந்து கொள்கிறீர்கள்? என்று சிந்தித்து பார்த்து அதை ஒரு பட்டியலிடுங்கள். பின் நான் ஏன் அவ்வாறு நடந்துகொள்கிறேன்? உண்மையாக இருந்தால் அப்படி என்ன சிக்கல் வந்து விட போகிறது? என்பதை யோசித்து பாருங்கள். இவ்வாறு நீங்கள் செய்வது, அடுத்த முறை அந்த தருணங்களில் நேர்மையாக நடந்து கொள்ள உதவும்.
சில நேரங்களில் நீங்கள் உண்மையை மறைக்கிறீர்கள் என்றால், நீங்கள் ஏதோ தவறு செய்கிறீர்கள் என்பதுதான் பொருள். உங்கள் தவறுகளை ஒப்புக் கொள்ளுங்கள், மன்னிப்பு கேட்டுவிட்டு அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதீர்கள். எப்போதும் வெளிப்படையாக இருங்கள், உண்மையை தெளிவாக கூறுங்கள். சில இடங்களில் குறிப்பாக உறவுகள் மத்தியில் இது சங்கடங்களை ஏற்படுத்தலாம் இது போன்ற நேரங்களில் பணிவாக புரியும்படி எடுத்து சொல்லுங்கள்.
தேவைப்படும்போது "இல்லை" என்று சொல்லுங்கள், மற்றவர்களை மகிழ்விப்பதற்காக விருப்பமில்லாத செயல்களை செய்ய ஒப்புக் கொள்ளாதீர்கள்.
நேர்மையை எல்லா நேரங்களிலும் கடைப்பிடிப்பது ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருக்கலாம்.. ஆனால் முயற்சி செய்யுங்கள். நண்பர்களே நம்மை சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் நேர்மையான மனிதர்களாகவும், உண்மையானவர்களாகவும் இருந்தால் இந்த உலகம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்...
மீண்டும் அடுத்த கட்டுரையில் சந்திப்போம்..
தொடரும்...
நன்றி,
நரேந்திரன் பாலகிருஷ்ணன்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!