செய்திகள் :

நிஃப்டி 50-ஐ விட அதிகமான வருமானம் தந்த பங்குகள் இவைதான்..!

post image

2025 - 26-ம் நிதி ஆண்டின் முதல் காலாண்டு நிதிநிலை முடிவுகள் சீஸனின் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டோம். கிட்டத்தட்ட 4,300 நிறுவனங்கள் நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுவிட்டன. ஒவ்வொரு வாரமும் நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகளை ஆராய்ந்து, அவற்றி லிருந்து முதலீட்டுக்குத் தகுதியான பங்குகளைத் தேர்வு செய்து, நம் போர்ட்ஃபோலியோ பகுதியில் கொடுத்துவருகிறோம். அந்தவகையில், இந்தக் காலாண்டு சீஸன் ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கும், துறைகளுக்கும் மற்றும் முதலீட்டாளர்களுக்கும் எப்படிப்பட்டதாக அமைந்திருக்கிறது என்பதை அளவிட வேண்டிய நேரம் இது.

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்

4,300 நிறுவனங்களில் 2,162 நிறுவனங்கள் பாசிட்டிவ் வளர்ச்சியையும், 2120 நிறுவனங்கள் நெகட்டிவ் வளர்ச்சியையும், மற்றவை மாற்றமில்லாத வளர்ச்சியிலும் இருப்பதைப் பார்க்க முடிந்தது. நிறுவனங்களின் பாசிட்டிவ்- நெகட்டிவ் வளர்ச்சிக்கு இடையிலான இடைவெளி மிகவும் குறுகியதாக இருப்பதிலிருந்து, பெரும்பாலான நிறுவனங்களுக்கு இது ஒரு கடினமான காலாண்டாகவே இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

புவிசார் அரசியல் பதற்றங்கள், வரி விதிப்புச் சிக்கல்கள் மற்றும் பொருளாதாரம் முழுவதும், குறிப்பாக ஐ.டி மற்றும் அது சார்ந்த துறைகளில் மந்தநிலையை உண்டாக்கியிருப்பதைப் பார்க்க முடிகிறது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஓரளவுக்கு சமாளித்து செயல்பட்டாலும், அவற்றின் கடன் புத்தக வளர்ச்சி குறித்த கவலை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஒட்டுமொத்தமாக, நிஃப்டி 50 குறியீட்டில் உள்ள நிறுவனங்கள் 6.12% வருவாய் வளர்ச்சியையும், 11.7% நிகர லாப வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளன. மிட்கேப் நிறுவனங்கள் 7.7% வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள அதே நேரத்தில், நிகர லாப வளர்ச்சி 10.6% அளவுக்குக் குறைவாகவே பதிவாகி உள்ளது. மிட்கேப் நிறுவனங்களைவிடவும், ஸ்மால்கேப் நிறுவனங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றின் வருவாய் வளர்ச்சி 5.8% மற்றும் நிகர லாப வளர்ச்சி மைனஸ் 8.5% ஆகவும் உள்ளது. இதிலிருந்து, ஸ்மால்கேப் நிறுவனங்கள் பொருளாதாரத்தை பாதிக்கும் காரணிகளைச் சமாளிக்க முடியாமல் இருக்கின்றன என்பதையே பார்க்க முடிகிறது.

முதலீட்டாளர்களுக்கான பாடம் என்னவெனில், பொருளாதார வளர்ச்சி நிச்சயமற்ற சூழலில் தள்ளாடும்போது, லார்ஜ் கேப், மிட்கேப் நிறுவனப் பங்குகளைத் தேர்ந்தெடுப்பதே புத்திசாலித்தனம். ஏனெனில், இவைதான் சவாலான காலங்களிலும் வலுவாகத் தங்களைத் தக்கவைத்துக்கொண்டு வளர்ச்சியைக் கொடுக்கின்றன.

இதுவரை நம்முடைய போர்ட்ஃபோலியோ பகுதியில் முதலீட்டுக்காகப் பரிந்துரைத்த 91 பங்குகளைத் துறை வாரியாகப் பார்க்கும்போது, இந்தக் காலாண்டு சீஸனின் தொடக்கத்திலிருந்து ஃபைனான்ஸ் துறைதான் முன்னணியில் உள்ளது. இந்தத் துறையிலிருந்து 20 பங்குகள் தேர்வாகி உள்ளன. ஃபைனான்ஸ் துறையைத் தொடர்ந்து வங்கிகள், கட்டுமானம், ஃபார்மா மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறைகள் இடம்பிடிக்கின்றன.

இந்த சீஸனில் ரூ.100 கோடிக்கும் குறைவான நிகர லாபத்தை ஈட்டிய நிறுவனங்களில், முதலீட்டுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட பங்கு களின் பட்டியலில் 30 பங்குகள் இருந்தன. இந்த 30 பங்குகளைத் துறை ரீதியாகப் பார்க்கும்போது, ஆட்டோ மொபைல் 4, மின் உபகரணங்கள் 3, ஐடி 2 மற்றும் ஃபார்மா 2 எனப் பங்கு வகிக்கின்றன.

மேலும், இந்தக் காலாண்டு சீஸனில் நான் பரிந்துரைத்த பங்குகள் என்ன மாதிரியான ரிட்டர்னை கொடுத்திருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.

இந்தப் பங்குகளுக்கான ஹோல்டிங் காலம், இந்தக் காலாண்டு சீஸன் தொடங்கிய தேதியிலிருந்து, இந்தக் கட்டுரை எழுதப்பட்ட நேரம் வரை என்று வைத்துக்கொள்வோம். ஆனந்த் ரதி வெல்த், ஆஃபில் 3ஐ லிமிடெட், எல் அண்ட் டி, ஜி.இ வெர்னோவா, டி.வி.எஸ் மோட்டார், சோழா இன்வெஸ்ட்மென்ட்ஸ், யுனோ மிண்டா, கேப்ளின் லேப், கே.பி.ஐ.எல், ஹெச்.பி.எல் இன்ஜினீயரிங் மற்றும் முத்தூட் ஃபைனான்ஸ் ஆகியவற்றிலிருந்து சிறப்பான லாபம் கிடைத்துள்ளது. பரிந்துரைத்திருக்கும் 91 பங்குகளில், ஹோம் ஃபர்ஸ்ட், கோஃபோர்ஜ், மகாநகர் கேஸ், பி.என்.பி ஹவுஸிங் ஃபைனான்ஸ் மற்றும் டி.சி.எம் ராம் ஆகியவை பெரிய நஷ்டத்தைச் சந்தித்துள்ளன. இருப்பினும், இந்தப் பங்குகளில் பெரும்பாலானவை, நிதிநிலை முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் உண்மையில் நன்றாகவே ஏற்றம் கண்டிருக்கின்றன. மேலும், இந்தப் பங்குகள், முதலீட்டாளர்கள் லாபம் ஈட்டும் வகையில் ஏற்றத்தின் நகர்வைத் தக்கவைத்துக் கொண்டதையும் பார்க்க முடிகிறது.

மேலும், இந்தக் காலாண்டு சீஸனின் கடந்த 50 நாள்களில், நிஃப்டி 50 குறியீடு வழங்கிய வருமான விகிதம் -2.35% ஆகும். ஆனால், நம்முடைய போர்ட்ஃபோலியோவில் நாம் தேர்வு செய்த பங்குகள், நிஃப்டி குறியீட்டை விட அதிகமாக 4% வருமானத்தை அளித்துள்ளன. இந்த 4% வருமானம் என்பது, நாம் பரிந்துரை செய்த 91 பங்குகள், கடந்த 50 நாள்களில் கொடுத்த ஒருங்கிணைந்த வருமான விகிதமாகும். இவற்றில், பல பங்குகள் அந்தந்த நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியான பிறகு, 20% அளவுக்குக்கூட ஏற்றத்தைப் பதிவு செய்திருக்கின்றன. எனவே, முதலீட்டாளர்கள் நம்முடைய பரிந்துரை களைப் பின்பற்றி சரியாக முதலீடு செய்திருந்தால், இப்போது சந்தையில் நிலவும் கொந்தளிப்பான காலகட்டத்திலும்கூட, அதிகமான வருமானத்தை ஈட்டியிருக்க முடியும்.

ஆனால், ஓட்டுமொத்தமாகப் பார்க்கும் போது பலரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இந்தக் காலாண்டு அமையவில்லை. சர்வதேச மற்றும் உள்நாட்டுக் காரணிகள் பலவும் தாக்கத்தை ஏற்படுத்தியதால், பல துறைகளில் நெருக்கடியையும் போராட்டத்தையும் காண முடிகிறது. ஒட்டுமொத்தமாக வேலைவாய்ப்பு என்பது பெரிய சவாலாகவே உருவெடுத்துள்ளது. மேலும், பல துறைகளில் நிறுவனங்கள் வளர்ச்சி காண்பதற்கு சிறிது காலம் காத்திருக்க வேண்டும். எனவே, பங்குகளைத் தேர்வு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

முதல் காலாண்டு முடிந்து, விரைவில் இரண்டாம் காலாண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறோம். இரண்டாம் காலாண்டு முடிவுகள் வெளியாக இன்னும் சில வாரங்கள் ஆகும் என்பதால், அதுவரையில் பங்கு முதலீடுகளை மிகவும் கவனமாகவே கையாள வேண்டும். தற்போதுள்ள நெருக்கடிகள் தொடரும்பட்சத்தில் இரண்டாம் காலாண்டு முடிவுகளும், நமக்குத் திருப்தி அளிக்கும் வகையில் இல்லாமல் போகலாம். எனவே, எதிர்பார்ப்புகளைக் குறைவாகவே வைத்துக்கொண்டு முதலீடுகளை மேற் கொள்வது நல்லது.

எந்தவொரு பங்கின் மீதும் கண்மூடித்தனமான நம்பிக்கை வைக்காதீர்கள். பங்குகளின் அடிப்படைத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து அதன் அடிப்படையில் முதலீடுகளை மேற்கொள்வதே புத்திசாலித்தனம்.

(பணம் பெருகும்)

தொகுப்பு: ஜெ.சரவணன்

நாணயம் விகடன் வழங்கும் பங்குச் சந்தை: டெக்னிக்கல் அனாலிசிஸ்..!

நாணயம் விகடன் வழங்கும் ‘பங்குச் சந்தை: டெக்னிக்கல் அனாலிசிஸ்..! பயிற்சி வகுப்பு சென்னையில் நடைபெற உள்ளது. பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் பயிற்சி அளிக்கிறார். 2025 செப்டம்பர் 13, சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. கட்டணம் ஒருவருக்கு ரூ.6,500 ஆகும். நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் சொந்தமாக லேப்டாப் அவசியம் கொண்டு வர வேண்டும். காலை, மாலை தேநீர் & ஸ்நாக்ஸ் மற்றும் மதிய உணவு வழங்கப்படும். முன்பதிவு செய்ய: https://bit.ly/Technical-analysis

நாணயம் விகடன்: ரெஜி தாமஸ் பயிற்சி அளிக்கும் பங்குச் சந்தை: டெக்னிக்கல் அனாலிசிஸ் வகுப்பு

‘பங்குச் சந்தை: டெக்னிக்கல் அனாலிசிஸ்’ பயிற்சி வகுப்பை சென்னையில் நடத்துகிறது நாணயம் விகடன். பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் பயிற்சி அளிக்கிறார்.2025 செப்டம்பர் 13, சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மால... மேலும் பார்க்க