நிதானம் தவறிக்கெட்டு! - சிறுகதை | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
அன்று ஞாயிற்றுக்கிழமை காலை மெதுவாக எழுந்து வாசலுக்கு வந்து, நடைபாதையின் இருமருங்கும் அன்றலர்ந்த பூக்களின் அழகை ரசித்துக் கொண்டிருந்தேன்.
பள்ளியில் மனப்பாடப் பகுதியில் படித்த டென்னிசனின் 'சுவர் இடிபாடுகளுக்கிடையே பூத்த மலர்’ என்ற பாடலில் வருவதைப் போல, அவற்றின் புத்தம்புது மலர்ச்சியில் இறைவனைக் காண முயல்வோமே என்ற ஆர்வம்.
"தம்பி!" குரல் கேட்டு நிமிர்ந்தேன். மேஸ்திரி மாரிமுத்து.
"என்ன மேஸ்திரி! ரொம்ப நாளா பார்க்க முடியல?" என்றேன்.
அவர் முகத்தில் ஆழ்ந்த மனச்சோர்வும், தீராத வருத்தமும் அப்பியிருந்தது.
"முன்னைப் போல வேலையில்ல. அவசர யுகம். எனக்கும் வயசாயிட்டில்ல. உடம்பும் சொன்னதை கேட்கமாட்டேங்குது" என்றார்.
எனக்கு காபி கொண்டு வந்த என் மனைவி, அவரிடம் நலம் விசாரித்துவிட்டு, அவருக்கும் எடுத்துவரச் சென்றாள். பெஞ்சில் இருவரும் உட்கார்ந்தோம்.
"செலவுக்கு பணம் தேவைப்படுதா?" என்று கேட்டேன்.
மறுத்த அவர், "தம்பி! போனதடவை பார்த்தபோது, சொன்னேனே: கேட்டிங்களா?" நான், "நீங்கள் வாய்ப்பிருக்கிறதா என்றுதானே கேட்டீர்கள் : நானும் அவரிடம் சொன்னேன் : ஆனால் வற்புறுத்திக் கேட்கவில்லை. ஏன்? அவசரமா?" என்று கேட்க "ஆமாம் தம்பி! வெவரமா அப்புறம் சொல்றேன்" என்று தயங்க, மனைவி கொண்டு வந்த காபியைக் குடிக்கச் சொன்னேன்.
குடித்த பின், "மறக்காம கேட்டு சொல்லுங்க : நாளன்னைக்கு வாறேன்" என்று கிளம்பினார்.
திரும்பியவர், கால் தடுமாறி கீழே விழப் பார்த்தார். ஓடி அவரை கைத்தாங்கலாக தூக்கினேன் "வீட்டிலே கொண்டுவந்து விடட்டுமா?" என்று கேட்க, மறுத்து வேண்டாமென்று தலையாட்டிவிட்டு, "ஏதோ நெனப்பு : இனிமே நானே போய்டுவேன்" என்று ஏதோ பிரியாவிடை பெற்று செல்வதுபோல் மெதுவாக வெளியேறினார்.
என் பள்ளிப் பருவத்திலிருந்தே மேஸ்திரியைத் தெரியும். புறநகர்ப் பகுதியிலுள்ள இந்த வீட்டைக் கட்டியதும் அவர்தான். அப்பாவும் மறைவதற்கு முன்னர் வரை, மேஸ்திரியுடன் மிகுந்த நட்பு பாராட்டி வந்தார்.
மேஸ்திரியின் வீடு இங்கிருந்து இரண்டாவது தெருவின் கடைசியில் இருக்கிறது.
மனைவியை இழந்தவர். ஒரே மகன் : திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள். அவனும் கட்டுமானத் தொழிலை நன்கு கற்று, நவீனமான கட்டிடங்கள் கட்டுவதில் தேர்ச்சி பெற்றிருந்தான்.
மேஸ்திரி ஒருமுறை, "வீட்டில் அவன் குடும்பத்தில் ஒருவனா நான் இருக்க முடியாது போலிருக்கு!" என்றார்.
"ஏன்? மருமகளுடன் சண்டையா?"
"இல்லை இல்லை. அது தங்கமான பொண்ணு. பொறுமைல பூமாதேவி. இவன்தான் ஓவரா குடிச்சிட்டு வந்து ஆட்டம் போடுறான். என்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுறான். அவங்களையும் அடிக்கிறான்" சொல்லிவிட்டு மேல் துண்டால் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
"எப்படி இந்த பழக்கம்? உங்களுக்கு இருந்ததா?" என்று கேட்டதற்கு, "நான் உடம்பு வலியினால் தூக்கம் வரலைன்னா, கொஞ்சம் போடுவேன். அதுவும் மாசத்திற்கு ஒரு தடவையோ, இரண்டு தடவையோதான்.
அசந்து நல்லா தூங்கினால்தானே அடுத்தநாள் வேலை செய்ய முடியும். இவனையும் அப்படித்தான் நெனச்சேன். ஆனால் கட்டுமானங்களை சீக்கிரமா முடிக்க, காண்டிராக்டர்கள்ல சிலபேர், நிறைய ஊத்திக் கொடுத்து பழக்கப்படுத்தி விட்டாங்க. இது எங்கபோய் முடியும்னு நெனக்கவே பயமா இருக்கு" என்றார்.
"கவலைப்படாதீர்கள். இதற்கெல்லாம் ஆலோசனை மையம் இருக்கிறது. அவர்கள் சொல்லிக் கொடுக்கும்படி நடந்தால், இந்த பிரச்னையிலிருந்து வெளியே வந்துவிடலாம்" என்று ஆறுதலாக கூறினேன்.
"அவன் கேப்பான்னு நினைக்கிறீங்க? மாட்டான்" என்று அவநம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
அவர் கேட்டீங்களா என வினவியது வேறொன்றுமில்லை. எங்கள் வீட்டிற்கு எதிரே இரண்டு காலி மனைகள். அதன் மூலையில், விளைச்சல் நிலமாக இருந்தபோது கட்டிய ஒரு பம்ப்செட் ரூம்.
நிறைய மரங்கள், தென்னை, மா, கொய்யா, நெல்லி என்று. மனைகளின் சொந்தக்காரர், அப்பாவுடன் வேலை பார்த்தவர்தான்.
இப்போது மகனுடன் ஹைதராபாத்தில் இருக்கிறார். எப்போதாவதுதான் வருவார்.
அவர் அவருடைய, மகனுடைய செல்போன் எண்களை என்னிடம் கொடுத்து வைத்திருக்கிறார்.
மேஸ்திரி கேட்கச் சொன்னது, அந்த பம்ப்செட் ரூமை சீர் செய்து அவர் தங்கிக் கொள்வதாகவும், மனை மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்வதாகவும், மரங்கள் செடிகளை பராமரித்துக் கொள்வதாகவும், அந்தந்த பருவங்களில் காய்க்கும் காய்கள், பழங்களைக் கொடுத்து விடுவதாகவும், அதற்கு அனுமதி வேண்டுமென்றும் கேட்டார்.
நானும் கேட்டேன். ஆனால் உரிமையாளர், "இதுபோல்தான் கேட்பார்கள். அப்புறம் சொந்தம் கொண்டாடி வம்புக்கிழுப்பார்கள்.
பத்திரம் நம் பெயரில் இருந்தாலும், அரசியல்வாதி, கட்ட பஞ்சாயத்து என்று நம்மிடமிருந்து கணிசமாக கறந்துவிடுவார்கள். வேண்டாமப்பா வம்பு. அது அப்படியே கிடக்கட்டும்" என்று சொன்னார்.
அதை அப்படியே மேஸ்திரியிடம் சொல்வதைவிட, இன்னொரு முறை விலாவாரியாகப் பேசி முழுமுயற்சி செய்து பார்த்துவிட்டு, பின்னர் எதுவாக இருந்தாலும் சொல்லிக் கொள்ளலாமென்று முடிவு செய்திருந்தேன்.
வீட்டருகே, அந்தப் பகுதியில்தான் தங்கியிருக்க வேண்டும் என்பதில் மேஸ்திரி உறுதியாக இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும்.
அவர் சொல்லியிருக்கிறார் : மகன் என்னதான் வெறுத்தாலும், அதற்காக விலகி தொலைதூரத்திற்கு ஓடிவிட முடியாது என்றும், அவர்களுக்கு ஆதரவாகவும், பேரக்குழந்தைகளிடம் பாசமான தொடர்புடனும், கூப்பிடும் தூரத்தில் இருக்க வேண்டும் என்றும் விரும்பினார்.
சுற்றுவட்டாரத்தில் எங்கும் அவருக்கேற்றாற்போல தங்க இடம் கிடைக்கவில்லை. அதனால்தான் இந்த ஏற்பாடு.
குளித்து முடித்து, காலைச் சிற்றுண்டி ஆனபிறகு முதல் வேலையாக எதிர்மனைக்காரருக்கு போன் செய்தேன். ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தோடு வெளியில் சென்றிருக்கலாம். பதிலில்லை. ஆனால் மாலையில் அவரே கூப்பிட்டார்.
அவரிடம், மேஸ்திரியைப் பற்றி விரிவாக விளக்கி, அவரது நடவடிக்கைகளுக்கு நான் உத்திரவாதம் கொடுப்பதாகவும், எந்த பிரச்னையும் வராதவாறு எதிரே உள்ள நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும், மேஸ்திரியின் பொறுப்பான பராமரிப்பினால், நீங்களே வரும்போது பார்த்து ஆச்சரியப்படுவீர்கள் என்றும் முடித்தபின்னர் ஒருவாறாக சில சிறு நிபந்தனைகளுடன் ஒப்புக் கொண்டார்.
என்ன! பேச்சுதான் ஒருமணி நேரத்திற்குமேல் நீடித்தது.
இரவு நித்திரைக்கு செல்லுமுன், பார்த்தமண்டல அலுவலகச் செய்தி : முக்கிய அலுவல்களுக்காக உடனே கிளம்பிவரச் சொல்லி. அங்கு சென்று வேலைகளை முடித்தபின், அடுத்த பணி நிமித்தமாக சில பிரயாணங்கள். வியாழக்கிழமை மதியம் தான் வீட்டிற்கு வரமுடிந்தது.
தண்ணீர் கொடுத்த என் மனைவி, "காலையில் எங்கு சாப்பிட்டீங்க? உணவுக்குப் பின் அடுத்த வேலையை கவனிக்கலாம்" என்றாள்.
" இப்போது பசியில்லை. அதுஎன்ன அடுத்தவேலை?" என்றேன்.
சற்றுநேரம் அமைதியாக இருந்தாள் கண்களில்திரண்ட கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, "நம்ம மேஸ்திரி காலமாகிவிட்டார்ங்க!" என்றாள்.
அதிர்ச்சியின் உச்சத்தில், "எப்போ?" என்று தடுமாறினேன். "ராத்திரியோ, விடியற்காலையிலோ.
நீங்கள் வந்து விடுகிறேனென்று சொன்னதினால் நானும் அங்கு போகாமல் காத்திருக்கிறேன்" என்றாள்.
"நான் முதலில் பார்த்து விட்டு வருகிறேன்" என்று பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.
அங்கு ஒரே கூட்டமாக இருந்தது. மேஸ்திரியின் உடலை ஸ்ட்ரெச்சரில் கிடத்தி ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். அமைதியாக தூங்குவதைப்போல் இருந்தார். அந்தப்பக்கம் மேஸ்திரியின் மகனை போலீஸ் வேனில் ஏற்றினார்கள்.
அந்தப்பகுதி கவுன்சிலர் அங்குள்ளவர்களுக்கு ஏதோ அறிவுறுத்திக் கொண்டிருந்தார். நான் அவரிடம், "என்னதான் நடந்தது அண்ணே?" என்று கேட்டேன்.
"மேஸ்திரி மவன் மொடாக்குடியன்ல. மப்பு தலைக்கேறி ராத்திரிப்பூரா ஒரே அலம்பல். அடி தாங்கமுடியாம அவன் பொண்டாட்டி அலற, கொழந்தைகள் பயந்துபோய் கத்த, குறுக்கபோன மாரிமுத்து மண்டேல, கையில கெடச்ச கட்டய எடுத்து வீச, சரியா பொட்டுல அடி. பொசுக்குன்னு போய்ட்டான்" என்றார். விபத்தில் அடிபட்டது போல் காயங்களுடன், கிழிந்த நாராக தன் பிஞ்சுக் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள் அவன் மனைவி. தாங்கமுடியாத வேதனையில் மனம் வலிக்க, சோகம் என்னைக் கவ்வியது.
-தர்மபுத்ரன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...