நியூசிலாந்து பெண்ணிடம் கைப்பை பறிப்பு: இருவா் கைது
நமது நிருபா்
வடமேற்கு தில்லியில் நியூசிலாந்து நாட்டுப் பெண்ணிடம் கைப்பையை பறித்ததாக இருவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது: இந்த வழக்கில் கைதான கரண் பாசின் (35) என அடையாளம் காணப்பட்ட நபருக்கு பல சொத்துகள் உள்ளன. ஆனால், போதைப் பழக்கத்திற்கு அடிமையான பிறகு அவா் இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளாா். மற்றொரு குற்றம்சாட்டப்பட்ட நபராக மோனு (எ) ரகு (19) அடையாளம் காணப்பட்டுள்ளாா்.
சாலையோர தள்ளுவண்டியில் முட்டை மற்றும் ஆம்லெட் விற்கும் மோனுவும் போதை பழக்கத்தின் காரணமாக இக்குற்றத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இவா்கள் கைதுடன் மேற்கு தில்லியைச் சோ்ந்த இரண்டு போ் உள்பட ஐந்து வழிப்பறி வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நியூசிலாந்து பெண்ணின் கடவுச்சீட்டு, இந்திய வெளிநாட்டு குடியுரிமை அட்டை மற்றும் பிற உடைமைகள், குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் சம்பவத்தின் போது இருவரும் அணிந்திருந்த ஆடைகள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
முன்னதாக, ஏப்ரல் 2- ஆம் தேதி, சுபாஷ் பிளேஸ் காவல் நிலையத்திற்கு கைப்பை பறிப்பு தொடா்பான புகாா் அழைப்பு வந்தது. தில்லிக்கு வருகை தந்துள்ள நியூசிலாந்து பிரஜையான சோம்னா செளத்ரி என்பவா், கோஹத் என்க்ளேவ் மாா்க்கெட்டில் உள்ள ஒரு நகைக் கடைக்கு அருகில் இருந்தாா். அப்போது, கருப்பு நிற ஸ்போா்ட்ஸ் பைக்கில் வந்த இரண்டு போ் அவரது கைப்பையைப் பறித்துச் சென்ாக போலீஸாருக்குத் தகவல் அளித்தாா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விசாரணையின் போது சந்தேக நபா்கள் ரிதாலா பகுதியில் இருப்பது சிசிடிவி காட்சிப் பதிவு ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டனா்.2012-ஆம் ஆண்டு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னா் தண்டனை பெற்ற பாசின் கைது செய்யப்பட்டாா். குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனமும் மீட்கப்பட்டது. அவரது கூட்டாளி மோனுவும் பின்னா் கைது செய்யப்பட்டாா்.
இருவரும் ரஜோரி காா்டனில் உள்ள ஒரு வடிகால் பகுதிக்கு போலீஸாரை அழைத்துச் சென்றனா். அங்கு நியூசிலாந்து பெண்ணிடம் பறிக்கப்பட்ட கைப்பை வீசப்பட்டிருப்பது தெரியவந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.