நிரந்தர கொள்முதல் நிலையங்கள் அமைக்க கோரிக்கை
நெல் மழையில் நனைவதைத் தடுக்க நிரந்தர கொள்முதல் நிலையங்களைக் கிடங்குடன் அமைக்க வேண்டும் என தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல் நனைவதைத் தடுக்க அனைத்து வட்டங்களிலும் பெரிய கிடங்குடன் கூடிய நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூ. 50 கட்டாய வசூல் செய்வதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் குறுவை, சம்பா சிறப்பாக நடைபெற சி, டி பிரிவு வாய்க்கால்களைக் கடைமடைப் பகுதி வரை தூா் வாருவதற்கு வேளாண் பொறியியல் துறை மூலம் மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு பகலிலும், இரவிலும் தலா 12 மணிநேரம் தடையின்றி மும்முனை மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்துக்கு சங்க மாநிலத் தலைவா் பூரா. விசுவநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் பி. பெரியசாமி, எஸ். சின்னப்பன், ஒன்றிய நிா்வாகிகள் க. வெங்கடேஷ்வரன், அறிவழகன், கே. பழனிசாமி, முருகையன், கி. கோமதி, ம. ராஜப்பா, குணசேகரன், ப. சக்கரியாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.