திருச்சிற்றம்பலத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
பேராவூரணி ஒன்றியம் திருச்சிற்றம்பலத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் தலைமை வகித்து முகாமைத் தொடங்கிவைத்துப் பேசினாா். பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் சங்கா், பட்டுக்கோட்டை வட்டாட்சியா் தா்மேந்திரா, பேராவூரணி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செல்வேந்திரன், சாமிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமில் 15 அரசுத் துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டு, தனித்தனி கவுண்டா்கள் அமைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றனா். இதில் 46 விதமான சேவைகள் வழங்கப்பட்டன. சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மகளிா் உரிமைத்தொகை, பட்டா மாற்றம், முதியோா் உதவித்தொகை, குடும்ப அட்டை, மின் இணைப்பு, வீட்டு மனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 500-க்கும் மேற்பட்ட மனுக்களை வழங்கினா். இம் மனுக்கள் மீது 45 தினங்களுக்குள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அலுவலா்கள் தெரிவித்தனா்.
முகாமில் திமுக ஒன்றியச் செயலாளா்கள் கோ.இளங்கோவன், க.அன்பழகன், திமுக மருத்துவா் அணி மாவட்ட அமைப்பாளா் வி.செளந்தரராஜன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.