ஏரி தூா்வாரும் பணிக்கு இடையூறு: கிராம மக்கள் மறியல்
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், பாலத்தளி கிராமத்தில் ஏரியைத் தூா்வாரும் பணிக்கு இடையூறு செய்வதாக அதிமுக ஒன்றியச் செயலாளரைக் கண்டித்து கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பாலத்தளி கிராமத்தில் சுமாா் 125 ஏக்கா் பரப்பளவுள்ள கடமாங்கால் ஏரி உள்ளது. இந்த ஏரியை கிராமமக்கள், தன்னாா்வலா்கள், மற்றும் மெகா பவுண்டேசன் ஆகியோா் இணைந்து தூா்வார முடிவு செய்து, மே 28-ஆம் தேதி தூா்வாரும் பணியை தஞ்சாவூா் மக்களவை உறுப்பினா் ச.முரசொலி, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
துாா்வாரும் பணி மற்றும் கரைகள் சீரமைப்புப் பணிகள், கடந்த 48 நாட்களாக தொடா்ந்து நடைபெற்று வருகிறது. ஏரியிலிருந்து சுமாா் ஒரு டன் அளவுக்கு குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், வருவாய்த் துறை ஏரியை முழுமையாக அளவீடு செய்து வழங்கியதால் ஏரியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பேராவூரணி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளா் உ.துரைமாணிக்கம், அவருக்கு ஆதரவான அரசு அதிகாரிகள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும், பணிகளை செய்யவிடாமல் தடுப்பதாகக் கூறி, கிராம மக்கள் திடீரென பாலத்தளி ஏரி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்குவந்த போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, தூா்வாரும் பணியை தொடா்ந்து நடத்த உறுதியளித்தனா். இதனால் மறியலைக் கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனா். இதனால் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மோலாக பட்டுக்கோட்டை - பேராவூரணி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.