பாகிஸ்தானில் இந்திய தூதரகத்தை மூடத் திட்டம்? மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது...
நிலக்கடலை, எள், ஆமணக்கு... லாபத்துக்கு வழிகாட்டும் எண்ணெய்வித்து சாகுபடி! மாபெரும் கருத்தரங்கு
எண்ணெய்வித்து பயிர்களின் சாகுபடியை அதிகரிக்கும் நோக்கிலும், எண்ணெய் வித்து பயிர்களைச் சாகுபடி செய்வதன் மூலம் லாபம் எடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ‘லாபம் கொடுக்கும் எண்ணெய் வித்துகள் சாகுபடி’ என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கு நடைபெற உள்ளது. பசுமை விகடன் மற்றும் விழுப்புரம் ரோட்டரி சங்கம் இணைந்து வழங்கும் இந்த ஒருநாள் கருத்தரங்கு, விழுப்புரத்தில் உள்ள ஸ்ரீ ஜெயசக்தி திருமண மண்டபத்தில் வருகிற ஏப்ரல் 27-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு மரச்செக்கு இயந்திரங்களை தயாரிக்கும் திருவண்ணாமலையைச் சேர்ந்த சுபம் இன்ஜினீயரிங் ஒர்க்ஸ், ஆதரவை வழங்கியுள்ளது.

இந்தக் கருத்தரங்கில் தமிழ்நாட்டின் முக்கிய எண்ணெய் வித்து பயிர்களான நிலக்கடலை, எள், ஆமணக்கில் அதிக மகசூல் பெற உதவும் தொழில்நுட்பங்கள், அதைச் சந்தைப்படுத்தும் முறைகள், எண்ணெய், கடலைமிட்டாய், எள்ளுருண்டை என்று மதிப்புக்கூட்டல் பொருள்களாக மாற்றுவதற்கான வழிகாட்டல்களும், வறட்சியான பகுதியில் சாகுபடி செய்ய வேண்டிய எண்ணெய்வித்து ரகங்கள், மதிப்புக் கூட்டலுக்கு ஏற்ற எண்ணெய்வித்து ரகங்கள் ஆகியவை குறித்து திண்டிவனம், எண்ணெய்வித்து ஆராய்ச்சி நிலையத்தின் இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் எஸ்.திருவரசன் பேச இருக்கிறார்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உண்ணக்கூடிய நிலக்கடலை, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக விழுப்புரம், விருதுநகர், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. `நிலக்கடலை சாகுபடியில் என்னுடைய அனுபவம்’ என்ற தலைப்பில் பேசுகிறார் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர், முனைவர் நிர்மலகுமாரி. இவர் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பகுதியில் இயற்கை விவசாயத்தில் நிலக்கடலை சாகுபடி செய்து அதிக மகசூல் எடுத்து வருகிறார். அதுகுறித்தான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்.

மேல்மலையனூரைச் சேர்ந்த வ.சதிஷ் என்ற இளம் விவசாயி, நிலக்கடலை, எள்ளைப் பயன்படுத்தி மரச்செக்கு எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார். இதோடு நிலக்கடலையை இயற்கை முறையில் சாகுபடியும் செய்து வருகிறார். இயற்கையான முறையில் மரச்செக்கு எண்ணெயையும் உற்பத்தி செய்து வருகிறார். மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி செய்ய எவ்வளவு முதலீடு தேவைப்படும், எவ்வளவு இடம் தேவைப்படும், மின் இணைப்பு, மானியம் குறித்தும் பேச இருக்கிறார்.
மரச்செக்கை கொண்டு எண்ணெய் எடுக்கும் முறை பற்றி நேரடி செயல்விளக்கமும் வழங்கப்படும்.
இந்தக் கருத்தரங்கில் என்னவெல்லாம் தெரிந்து கொள்ளலாம் என்பது குறித்து மரச்செக்கு எண்ணெய் உற்பத்தியாளர் வ.சதிஷிடம் பேசியபோது, “நான் 15 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். இயற்கை முறையில் நிலக்கடலை பயிர் செய்து வருகிறேன். உற்பத்தி செய்யப்படும் நிலக்கடலையை அப்படியே விற்கும்போது சில நேரங்களில் விலை கிடைக்காமல் போகும். அந்த மாதிரி நேரங்களில் மதிப்புக்கூட்டல் என்பது மிகப் பெரிய வரமாக இருந்து வருகிறது. அதிலும் மரச்செக்கு மூலம் எண்ணெய் ஆட்டி விற்பது எளிமையாக இருக்கிறது. மதிப்புக்கூட்டுவதன் மூலம் எவ்வளவு லாபம் ஈட்டலாம் என்பது குறித்து என்னுடைய அனுபவங்களிலிருந்து கற்ற விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

தற்போது எண்ணெய் வித்துகளை பயிரிடுவது குறைந்து வருகிறது. ஆனால், இதற்கான தேவை அதிகமாகவே உள்ளது. நிலக்கடலையை நாமே உற்பத்தி செய்து எண்ணெய் ஆக்கி விற்பனை செய்யலாம். நிலக்கடலை பயிரிடாதபோது, மற்ற மாநிலங்களிலிருந்து வாங்கி அவற்றை எண்ணெய் ஆக்கி விற்பனை செய்யலாம். இந்த இரண்டிலும் உள்ள சாதக பாதக அம்சங்கள் பற்றி பேச இருக்கிறேன். வட தமிழகத்தில் நிலக்கடலை, எள் சாகுபடி அதிகமாக உள்ளது. அதனால் மரச் செக்கு எண்ணெய் உற்பத்தி செய்ய வாய்ப்புகள் நிறைய உள்ளன.
விவசாயத்தோடு மதிப்புக்கூட்டலும் செய்யும்போது விவசாயம் நிரந்தர தொழிலாக மாறும். நமது நாட்டின் பொருளாதாரமாக விளங்கும் விவசாயத்தை விவசாயம் சார்ந்த தொழில்கள் மூலமே மீட்டு எடுக்க முடியும். பலருக்கும் விவசாயத்தில் நஷ்டம் ஏற்படுவதற்கான காரணம் ‘ஃபாஸ்ட் மூவிங் கமர்சியல் கூட்ஸ்’ (fast moving commercial goods- FMCG) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். உடனடியாக விற்பனை செய்துவிடும் பொருள்களை தேர்ந்தெடுத்து விற்க வேண்டும். இதுகுறித்த வழிகாட்ட இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ளுங்கள்" என்றார்.

இந்தக் கருத்தரங்கில் செக்கு இயந்திரம் பயன்பாடு குறித்த நேரடி செயல்விளக்கமும் உண்டு. திருவண்ணாமலை, சுபம் இன்ஜினீயரிங் ஒர்க்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விக்னேஷ் நேரடி செயல் விளக்கம் அளிக்க இருக்கிறார்.
கருத்தரங்கில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். முன்பதிவு முக்கியம்.
கருத்தரங்கில் கலந்துகொள்பவரின் பெயர், முகவரி, செல்போன் எண்ணுடன் 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு இந்த எண்ணையே தொடர்பு கொள்ளவும்.
நாள்: 27: 04 :2025 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை 9:30 மணியிலிருந்து மாலை 4 மணி வரை .
இடம்: ஸ்ரீ ஜெயசக்தி திருமண மண்டபம், ரெட்டியார் மில் பேருந்து நிறுத்தம், புதுச்சேரி ரோடு, விழுப்புரம்.
(விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து 1 கிலோமீட்டர், பேருந்து நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர்).

(கருத்தரங்கில் தேநீர், மதிய உணவு ஆகியவை வழங்கப்படும்)
கருத்தரங்கில் கலந்துகொள்பவரின் பெயர், முகவரி, செல்போன் எண்ணுடன் 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு இந்த எண்ணையே தொடர்பு கொள்ளவும்.