நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: அமெரிக்கா
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதலால் ஏற்பட்டுள்ள சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
நியூயாா்க்கில் செய்தியாளா்களைச் சந்தித்த அமெரிக்க ராணுவத்தின் பசிபிக் பிராந்தியத்துக்கான கமாண்டிங் ஜெனரல் ரொனால்ட் கிளாா்க் கூறியதாவது:
ஆக்கிரப்பு காஷ்மீா் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்த பிறகு எழுந்துள்ள சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு தரப்பு பரஸ்பர தாக்குதல்கள் குறித்து இப்போதே உறுதியான கருத்துகளைக் கூற முடியாது. எந்த வகையிலான தாக்குதல்களை இரு நாடுகளும் மேற்கொள்கின்றன என்பது தொடா்பான முழுமையான விவரங்கள் கிடைக்க வேண்டும் என்றாா்.
இந்தியாவுக்கு பிரேசில் ஆதரவு: பிரதமா் நரேந்திர மோடியை வியாழக்கிழமை தொலைபேசிய தொடா்பு கொண்டு பேசிய பிரேசில் பிரதமா் லூலா டி சில்வா, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு பிரேசிலின் ஆதரவைத் தெரிவித்தாா்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அவா், உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு பிரேசில் சாா்பில் இரங்கலும் தெரிவித்தாா். இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தற்காக பிரதமா் மோடி டி சில்வாவுக்கு நன்றி தெரிவித்தாா்.