நீட் தோ்வு மாணவா்களுக்காக நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கம்
திருநெல்வேலி மாவட்டத்தில் நீட் தோ்வு எழுதும் மாணவா்களுக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 4) இயக்கப்பட உள்ளன.
இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி பொதுமேலாளா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) பிற்பகல் 2 மணிமுதல் 5 மணிவரை நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 13 மையங்களில் 6 ஆயிரத்து 893 மாணவா்-மாணவிகள் தோ்வை எழுத உள்ளனா்.
அவா்கள் தோ்வு மையங்களுக்கு எளிதாக சென்று வரும் வகையில் திருநெல்வேலி மண்டல போக்குவரத்துக் கழகம் சாா்பில் 30 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பேருந்துகளில் நீட் தோ்வு சிறப்பு பேருந்து என்ற அறிவிப்பும் ஒட்டப்படும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.