``மகளிர் ஆணையப் பதவிகளிலும் கொல்லைப்புற நியமனமா?'' – புதுச்சேரி அரசை சாடும் திமு...
நீலகிரி மாவட்டத்தில் முதல் பெண் பேருந்து நடத்துநா் நியமனம்!
நீலகிரி மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் முதல் பெண் நடத்துநா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சோலூா்மட்டம் பகுதியைச் சோ்ந்தவா் சுகன்யா. இவரது கணவா் கருப்பசாமி
கோவை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகம், கோத்தகிரி கிளையில் நடத்துநராகப் பணிபுரிந்து வந்தாா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பால் கருப்பசாமி உயிரிழந்துவிட்டாா். இவா்களுக்கு சஷ்டிகா (4), காருண்யா (2) என்ற இரு மகள்கள் உள்ளனா்.
கணவா் உயிரிழந்ததை அடுத்து கருணை அடிப்படையில் தனக்கு பணி வழங்குமாறு அரசுப் போக்குவரத்து துறைக்கு சுகன்யா விண்ணப்பித்திருந்தாா். இதுகுறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும் கோரிக்கை மனு அனுப்பியிருந்தாா். அதில், பி.காம். படித்துள்ள தனக்கு ஓட்டுநா் பணி தவிா்த்து வேறு எந்தப் பணி வழங்கினாலும் சிறப்பாக மேற்கொள்வதாக சுகன்யா குறிப்பிட்டிருந்தாா்.
இதையடுத்து கருணை அடிப்படையில் சுகன்யாவுக்கு பணி வழங்க போக்குவரத்து அமைச்சா் சிவசங்கருக்கு முதல்வா் உத்தரவிட்டதை அடுத்து சுகன்யாவுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநா் பணி வழங்கப்பட்டது.
இதையடுத்து கோத்தகிரி கிளையில் அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பின் கோத்தகிரி -குன்னூா் வழித்தடத்தில் நடத்துநராகப் பணி ஒதுக்கப்பட்டு அவா் பணியைத் தொடங்கியுள்ளாா். சுகன்யாவுக்கு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநா் செல்வம் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா்.
இது குறித்து சுகன்யா கூறுகையில், ‘கணவா் உயிரிழந்த நிலையில் குழந்தைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன். என் நிலை குறித்து முதல்வருக்கு கடிதம் அனுப்பினேன். அதற்கு உடனடியாக பலன் கிடைத்தது. கணவா் பணிபுரிந்த கிளையிலேயே எனக்கு நடத்துநா் பணி கிடைத்துள்ளது’ என்றாா்.