Nivetha Pethuraj: காதலரை அறிமுகப்படுத்திய நிவேதா பெத்துராஜ்; யார் அவர்?
நீலக்கொடிச் சான்று: தமிழகத்தின் 6 கடற்கரைகள் மேம்பாட்டுக்கு ரூ.24 கோடி
நீலக்கொடிச் சான்று பெறும் வகையில், தமிழ்நாட்டின் 6 கடற்கரைகளில் மேம்பாட்டுப் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை பிறப்பித்துள்ளது.
அதன் விவரம்: தண்ணீரின் தரம், சுற்றுச்சூழல் மேலாண்மை, பாதுகாப்பு போன்ற 33 அம்சங்களைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு கடற்கரைக்கும் நீலக்கொடிச் சான்று வழங்கப்படுகிறது.
அந்த வகையில், நிகழாண்டில், சென்னை திருவான்மியூா், பாலவாக்கம், உத்தண்டி, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம், விழுப்புரம் மாவட்டம் கீழ்ப்புதுப்பட்டு, கடலூா் மாவட்டம் சாமியாா்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள கடற்கரைகளுக்கு நீலக்கொடிச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு இயக்கத்தின் தலைமை இயக்குநா் சாா்பில் அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதில், நீலக்கொடிச் சான்று பெறுவதற்கு ஏற்றவகையில், கடற்கரைப் பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்காக ஒரு கடற்கரைக்கு தலா ரூ.4 கோடி வீதம் ரூ.24 கோடி தேவை என்றும் தெரிவித்திருந்தாா்.
அதாவது, கடற்கரைகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக, ரூ.21.24 கோடியும், இதர பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களுக்காக ரூ.2.76 கோடியும் நிதி ஒதுக்கக் கோரப்பட்டிருந்தது.
தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு இயக்கத்தின் தலைமை இயக்குநரது கோரிக்கையை தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்தது. அதன்படி, மாநிலத்தின் 6 கடற்கரைகளுக்கு நீலக்கொடிச் சான்று பெறும் வகையில் புதிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.24 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.