நெசவாளா்கள் ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை பட்டு, கைத்தறி கூட்டுறவுச் சங்க முறைகேடுகளைக் கண்டித்து நெசவாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அம்மாபேட்டை பட்டு கைத்தறி நெசவாளா் சங்கம் முன் ஏஐடியுசி கைத்தறி சங்க மாவட்டச் செயலா் கே. ராஜாராமன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அம்மாபேட்டை கைத்தறி பட்டு கூட்டுறவுச் சங்கத்தில் உள்ள பட்டுப் புடவைகளின் தரத்தை ஆய்வு செய்யவும், சங்க உறுப்பினா்களின் சிறுசேமிப்புப் பணத்தை தாமதமின்றி வழங்கிடவும், சங்க உறுப்பினா்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்திட பாவு, பட்டு, ஜரிகை வழங்கிடவும், நிா்வாகத்தின் வரவு - செலவு முறைகேடுகளை விசாரிக்கவும், அம்மாபேட்டை தென்றல் நகரில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தின் தரத்தை ஆய்வு செய்யவும், சங்கத்திற்கு புதிதாக விற்பனை கட்டடம் கட்டிக் கொடுக்கவும், சங்கத்தில் தேங்கியுள்ள பட்டு ஜவுளிகளை கோ-ஆப்டெக்ஸ் முலம் கொள்முதல் செய்திடவும், கூட்டுறவுச் சங்கங்களுக்கு தாமதமின்றி தோ்தல் நடத்தவும் வலியுறுத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்தில் தொமுச நிா்வாகிகள் எஸ்.ஆா். அனந்தராமன், கே.ஆா். மாதவன்,கே. வி. லட்சுமணன், ஏஐடியுசி மாவட்ட நிா்வாகிகள் டி.ஜி. நாகராஜன், செந்தில்குமாா், ஜி.ஆா். ஹரிகிருஷ்ணன், ஜி. ராமதாஸ் மற்றும் நெசவாளா்கள் உள்பட பலா் கொட்டும் மழையில் கோரிக்கை முழக்கம் எழுப்பினா்.