``நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு; குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாதது வருத்தம்'' – செல்வப்பெருந்தகை
நெல்லையில் காங்கிரஸ் மாநாடு
நெல்லையில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“வாக்குத் திருட்டை தடுப்போம், வாக்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுப்போம் என்ற தலைப்பில் வரும் 7-ம் தேதி நெல்லையில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு ஒரு திருப்புமுனையாக அமையும்.
இதில் சுமார் 1 லட்சம் தொண்டர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் இருந்து மேலிடத் தலைவர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்க உள்ளனர்.

பொறுப்பு டி.ஜி.பி
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியிலும் பொறுப்பு டி.ஜி.பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உத்திரப்பிரதேசத்திலும் 5 முறை பொறுப்பு டி.ஜி.பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழகத்தில் இது ஒன்றும் புதிதல்ல.
தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம்
தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை கேட்கும் அ.தி.மு.க., மக்களவை கூட்டத் தொடரும் போது, வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியிடம் வெள்ளை அறிக்கையை வெளியிட கேட்கட்டும்.
காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கு
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் ஓராண்டாக கடந்தும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாதது வருத்தமளிக்கிறது. ஆனால், தமிழ்நாடு காவல்துறையின் மீது நம்பிக்கை உள்ளது. விரைவில் சரியான குற்றவாளிகள் கைது செய்யப்படுவர்.

இந்தியா கூட்டணி
இந்தியா கூட்டணி வலிமையாகவும் இணக்கமாகவும் உள்ளது. ஏற்கெனவே ஐந்து முறை வெற்றி கண்டுள்ளது. தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கங்களான பா.ம.க., தே.மு.தி.க., ஓ.பிஸ் போன்றோர் வெளியேறியுள்ளனர்.
ஆனால், இந்தியா கூட்டணியின் பலம் குறையவில்லை. ஜி.கே. மூப்பனார் ஒரு போதும் பா.ஜ.கவை ஆதரித்ததில்லை. அவரது ஆன்மாவும் பா.ஜ.கவை மன்னிக்காது,” என்றார்.