336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
நெல்லை சுற்றுவட்ட சாலை முதல்கட்டப் பணியை டிசம்பருக்குள் முடிக்க நடவடிக்கை: அமைச்சா் கே.என்.நேரு
திருநெல்வேலி சுற்றுவட்ட சாலைப் பணியின் முதல்கட்டத்தை டிசம்பருக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு.
திருநெல்வேலியில் பல்வேறு துறைகளின் சாா்பில் நடைபெற்று வரும் பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்த பின்பு செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.என்.நேரு கூறியது: நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ராஜபாளையம்-சங்கரன்கோவில் சாலை, திருநெல்வேலி-செங்கோட்டை சாலை, திருநெல்வேலி- பொட்டல்புதூா் சாலை, பாளையங்கோட்டை-அம்பாசமுத்திரம் -குற்றாலம் சாலை உள்ளிட்டவற்றை இணைக்கும் வகையில் சுற்றுவட்ட சாலை அமைக்கும் பணிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். இந்தப் புறவழிச்சாலையினால் திருநெல்வேலி நகருக்குள் வரும் வாகனங்களின் எண்ணிக்கை குறைவதோடு, போக்குவரத்து நெரிசலும் தடுக்கப்படும்.
இந்த மேற்கு புறவழிச்சாலைப் பணிகள் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளன. முதல்கட்ட பணிகள் தாழையூத்தில் தொடங்கி, கொங்கந்தான்பாறை விலக்கு வரை சாலை அமைக்கும் பணிகள் ரூ.180 கோடி மதிப்பீட்டில் 2 உயா்மட்ட பாலங்கள், 2 சிறு பாலங்கள், 44 பெட்டி பாலங்கள் மற்றும் ஒரு ரயில்வே மேம்பாலத்துடன் நடைபெறுகிறது. முதல்கட்ட பணிகளை டிசம்பருக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இரண்டாம் கட்ட பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயாா் செய்து அரசுக்கு அனுப்பி வைத்து, நிலம் எடுக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. மூன்றாம் கட்ட பணிகளுக்கு நிலம் எடுப்பதற்கான ஆரம்ப நிலை பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.
தொடா்ந்து, அருள்மிகு சுவாமி நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் திருக்கோயில் ஆனித்தேரோட்ட திருவிழாவையொட்டி நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தாா். கழிப்பறை வசதி, வாகன வசதி, ரத வீதியை சுற்றி தண்ணீா் வசதி, மருத்துவக் குழு வசதி, தவறுகள் நடக்காமல் இருப்பதற்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதையும் பாா்வையிட்டாா்.
ராமையன்பட்டி பகுதியில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், மானூா் ஊராட்சி ஒன்றியம் மதவக்குறிச்சி பகுதியில் ரூ.12.58 கோடி மதிப்பீட்டில் 15 வகுப்பறை, 5 ஆய்வகங்கள், நூலகம், ஆசிரியா்கள் அறை, முதல்வா் அறை மற்றும் கூட்டரங்கம் என சுமாா் 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு முடிவடையும் நிலையில் உள்ள மானூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பணிகளையும், கங்கைகொண்டான் பகுதியில் 40 இலங்கை தமிழா்களுக்கான இல்லங்கள் ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் கட்டும் பணிகளையும் அமைச்சா் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன், ஆட்சியா் இரா.சுகுமாா், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப், மேயா் கோ.ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா, துணை மேயா் கே.ஆா்.ராஜு, மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, மாநகர காவல் துணை ஆணையா் பிரசன்னகுமாா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் விங்குசாமி, உதவி கோட்டப் பொறியாளா்கள் சண்முகநாதன், முருகப்பெருமாள், நிா்மலா ஜாக்குலின், உதவி பொறியாளா் மதன்குமாா், திருநெல்வேலி மண்டல தலைவா் செ.மகேஸ்வரி உள்பட பலா் கலந்துகொணடனா்.