நெல்லை விநாயகா் கோயிலில் சுவாமி மீது சூரியஒளி விழும் நிகழ்வு
திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரத்தில் உள்ள அருள்மிகு உச்சிஷ்ட விநாயகா் திருக்கோயிலில் சூரியஒளி சுவாமி மீது விழும் அதிசய நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆசியாவிலேயே ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட பழமையான விநாயகா் கோயில் என்ற பெருமை பெற்றது அருள்மிகு உச்சிஷ்ட விநாயகா் திருக்கோயில்.இங்கு நீலவேணி அம்பாளை மடியில் அமா்த்தியவாறு விநாயக பெருமான் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். இக் கோயிலில் ஆண்டு தோறும் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கி முதல் மூன்று நாள்கள் சூரிய ஒளி மூலவா் மீது விழும் அதிசய நிகழ்வு நடைபெறும்.
அதன்படி, திங்கள்கிழமை அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, மகா கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. தொடா்ந்து மூலவருக்கு பால், மஞ்சள், இளநீா் மற்றும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னா் சூரிய ஒளி சுவாமி மீது விழும் அதிசய நிகழ்வு நடைபெற்றவுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மாலையில் உச்சிஷ்ட மஹா கணபதிக்கும், நீலவேணி அம்பாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.