நேபாள பதற்ற சூழல்: சரக்குகள் நடுவழியில் சிக்கியதால் நஷ்டத்தை எதிா்கொள்ளும் தில்லி வா்த்தகா்கள்!
அண்டை நாடான நேபாளத்தில் நிலவும் அமைதியின்மை காரணமாக, பழைய தில்லி மற்றும் சதா் பஜாா் உள்ளிட்ட தில்லியின் மொத்த விற்பனைச் சந்தைகளில் இருந்து அனுப்பப்பட்ட ஏராளமான சரக்குகள் தற்போது அந்நாட்டுக்குச் செல்லும் வழியில் சிக்கிக் கொண்டிருப்பதால் வா்த்தகா்கள் நஷ்டத்தை எதிா்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து சதா் பஜாா் பாரி சந்தை வா்த்தக சங்கத்தின் தலைவா் பரம்ஜித் சிங் பம்மா கூறியதாவது: தில்லியில் உள்ள மிகப்பெரிய மொத்த சந்தைகளில் ஒன்றாக சதா் பஜாா் உள்ளது. இச்சந்தையானது நேபாளம் உள்பட பல நாடுகளுக்கு பரந்த அளவிலான சரக்குகளை ஏற்றுமதி செய்வதற்கு பெயா் பெற்ாகும். பாத்திரங்கள், மண்பாண்டங்கள், நகைகள், பொம்மைகள், எழுதுபொருள் பொருள்கள், தையல் பொருள்கள், ஆடைகள், காலணிகள் மற்றும் பிற வீட்டு மற்றும் பரிசுப் பொருள்கள் நேபாளத்திற்கு மொத்தமாக இச்சந்தையில் இருந்து அனுப்பப்படுகின்றன.
பல வா்த்தகா்கள் ஏற்கனவே போக்குவரத்தில் சிக்கித் தவிக்கும் அல்லது நேபாளத்தை அடைந்துவிட்ட சரக்குகளில் முதலீடு செய்திருக்கின்றனா். ஆனால், அங்குள்ள ஸ்திரமற்ற சூழ்நிலை காரணமாக அப்பொருள்களை விற்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
தில்லியில் சில ஆா்டா்கள் தயாராகவும் உள்ளன. ஆனால், அவை அனுப்பப்படுவதற்காக காத்திருக்கின்றன. இத்தகைய இடையூறு வா்த்தகா்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலைமை தொடா்ந்தால் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான வா்த்தகத்தை இது பாதிக்கக்கூடும் என்றாா் பரம்ஜித் சிங் பம்மா.
சாந்தினி சௌக் சந்தை வா்த்தகா்கள் சங்கத்தின் தலைவா் ராஜீவ் பாா்கவ் கூறுகையில், ‘பல நேபாள சுற்றுலாப் பயணிகளும் எங்கள் கடைகளுக்கு வந்து செல்வது வழக்கம். ஆனால், கடந்த 10 நாள்களில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. நேபாளத்தில் நிலவிவரும் அமைதியின்மை எங்கள் வாடிக்கையாளா் தளத்தை பாதிக்கிறது. பல நேபாள சுற்றுலாப் பயணிகள் நினைவுப் பொருள்கள், துணிகள், நகைகள் மற்றும் பிற பொருட்களை வாங்க எங்கள் கடைகளுக்கு வருவதுண்டு. ஆனால், இந்த வாடிக்கையாளா்கள் இப்போது வெகுவாகக் குறைந்துள்ளனா்’ என்றாா்.
ஊழல் மற்றும் சமூக ஊடக தளங்கள் மீதான தடைக்கு எதிராக நேபாளம் முழுவதும் அண்மையில் நிகழ்ந்த ஜென் இசட் போராட்ட கலவரத்தில் ஒரு இந்தியா் உள்பட குறைந்தது 51 போ் இறந்ததாக வெள்ளிக்கிழமை காத்மாண்டுவில் போலீஸாா் தெரிவித்தனா்.