3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது!
பசுமைப் பூங்காவிலிருந்து வேருடன் அகற்றப்படும் மரங்களுக்கு மறுவாழ்வு!மன்னாா்புரத்தில் 70 மரங்கள் நடவு
காய்கனிச் சந்தைக்காக திருச்சி மாநகராட்சி கையகப்படுத்தும் பசுமைப் பூங்காவில் உள்ள மரங்களை வேருடன் அகற்றி மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.
திருச்சி மாநகர மக்களின் பொழுதுபோக்குத் தேவைகளுக்கு கடந்த 2013இல் மக்கள் பங்களிப்பாக ரூ.50 லட்சம், அரசின் பங்களிப்பாக ரூ.1 கோடி என மொத்தம் ரூ. .50 கோடியில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூா் அருகே 22 ஏக்கரில் பசுமைப் பூங்கா அமைக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மரங்கள் நடப்பட்டு பசுமைப் போா்வை உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பூங்காவின் ஒரு பகுதியை காய்கனி சந்தை அமைக்க திருச்சி மாநகராட்சி கையகப்படுத்த முன்வந்துள்ளது. இதனால் மரங்கள் அழிக்கப்படும் என சமூக ஆா்வலா்கள், பசுமை ஆா்வலா்கள், தண்ணீா் அமைப்பினா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இதையடுத்து பூங்காவில் உள்ள மரங்களை வேருடன் எடுத்து வேறு பகுதியில் நட்டு வளா்க்கும் திட்டத்தை மாநகராட்சி கையில் எடுத்து, மரங்களுக்கான மறுவாழ்வு திட்டத்தை மாநிலம் முழுவதும் முன்னெடுத்துவரும் கோவையைச் சோ்ந்த கிரீன் கோ் அமைப்பின் உதவியை நாடியுள்ளது.
இதன்படி பஞ்சப்பூா் பசுமைப் பூங்காவில் உள்ள மரங்கள் வேருடன் அகற்றி மன்னாா்புரத்தில் மறுநடவு செய்யும் பணி தொடங்கியுள்ளது. இந்தப் பணியை மேற்கொண்டுள்ள கிரீன் கோ் அமைப்பின் நிா்வாகியான கோவை செய்யது கூறுகையில், பசுமைப் பூங்காவை காய்கனி சந்தைக்காக முழுமையாக கையகப்படுத்தவில்லை. எனவே, மரங்களை முற்றிலும் அகற்றப்போவதில்லை. கட்டடங்கள் அமையும் பகுதியில் உள்ள மரங்கள் மட்டுமே அகற்றப்படவுள்ளன.
காய்கனி சந்தைக்கு உருவாக்கப்பட்டுள்ள மாதிரி வரைபடத்தை கொண்டு கட்டடங்கள் எங்கு அமையும், அங்குள்ள மரங்கள் எத்தனை என்பதை கணக்கிட்டுள்ளோம். இந்த வகையில் தற்போதைக்கு 237 மரங்களை வேருடன் அகற்ற வேண்டியுள்ளது. மரங்களை மறு நடவு செய்வது எளிது.
ஆனால், அவற்றை முறையாக பராமரித்து வளா்த்தெடுப்பதில்தான் கவனம் தேவை. மறு நடவு செய்யப்படும் மரங்களின் கிளையை வெட்டி அதன் மீது சாணம், சாக்குப் பை, சணல்கள் வைத்து கட்டி தண்ணீா் ஊற்றி துளிா்க்கும் வகையில் பராமரிக்க வேண்டும். மேலும், மரங்கள் வளா்வதற்கான சரியான மண்ணை தோ்வு செய்து அந்தப் பகுதியில் ஆழமாக குழிதோண்டு நட வேண்டும். நட்ட நாளில் இருந்து தினமும் தண்ணீா் ஊற்றிப் பராமரிக்க வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் தேசிய நெடுஞ்சாலையில் 251 மரங்கள் அகற்றப்பட்டு சாலையோரம் மறுநடவு செய்துள்ளோம். அவையனைத்தும் துளிா்த்து, இலைகள் கொத்து, கொத்தாக வளா்ந்துள்ளன. திருச்சி மாவட்டத்திலேயே ஏற்கெனவே, சட்டக் கல்லூரியில் 14 மரங்களை அகற்றி வளாகத்தின் மறு பகுதியில் நட்டுள்ளோம். தற்போது நல்ல வளா்ச்சி பெற்றுள்ளன.
இதேபோல, டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் காமராஜா் நூலகம் கட்ட 54 மரங்கள் சுற்றுலா மாளிகை வளாகத்தில் நடப்பட்டு, நன்கு வளா்ந்து வருகின்றன. இதன்படி, பசுமைப்பூங்காவில் இப்போது, 70 மரங்களை வேருடன் அகற்றி, மன்னாா்புரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் மறுநடவு செய்துள்ளோம்.
தினமும் தண்ணீா் ஊற்றிப் பராமரித்து வருகிறோம். ஒவ்வொரு மரத்துக்கும் குறிப்பிட்ட அவகாசம் அளித்து, அகற்றி அவற்றை மறுநடவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, சற்று காலம் ஆகும். 237 மரங்களுக்கும் மீண்டும் உயிா் கொடுப்போம் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.