உச்சநீதிமன்ற நீதிபதி கே.வினோத் சந்திரன்- கொலீஜியம் பரிந்துரை
பட்டியலினத்திலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி வரை! சி.டி. ரவிகுமாா் பின்னணி!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேட் கிராமத்தைச் சேர்ந்த சி.டி. ரவிகுமார், பட்டியலினத்தில் பிறந்து, இன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து பணி ஓய்வு பெறுகிறார்.
அவரது பதவிக் காலம் ஜனவரி 5ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதால், உச்ச நீதிமன்றத்தின் கடைசி வேலைநாளான வெள்ளிக்கிழமை அவருக்கு பிரியாவிடை அளிக்கப்பட்டது.
உயிரியல் படிப்பில் பட்டப்படிப்பை முடித்த பிறகு, வழக்குரைஞர் ஆகும் கனவோடு சட்டப்படிப்பை எடுத்துப் படித்து வழக்குரைஞராக பணியாற்றி, கடும் உழைப்பால் கேரள உயர் நீதிமன்ற நீதிபதி, அடுத்து நாட்டின் உயரிய நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி என உயர்ந்துள்ளார் ரவிகுமார்.
யார் இவர்?
கேரள உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ரவிகுமாா் கடந்த 2021, ஆகஸ்ட் 31-ஆம் தேதி பதவியேற்றாா். இவா் உச்சநீதிமன்றத்தின் 9-ஆவது மூத்த நீதிபதியாவாா்.
கேரள மாவட்ட நீதிமன்றத்தில் 1986ஆம் ஆண்டு வழக்குரைஞராக பயிற்சி மேற்கொண்டார். பிறகு உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றினார். 2009ஆம் ஆண்டு அவர் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
ஜன.5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையுடன் அவா் பணி ஓய்வுபெறவுள்ள நிலையில், வாரத்தின் இறுதி வேலை நாளான வெள்ளிக்கிழமை அவருக்கு நடத்தப்பட்ட பிரியாவிடை நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.
நீதிபதி ரவிகுமாரை பாராட்டி உருக்கமாக பேசிய சஞ்சீவ் கன்னா, ‘எளிமையான கிராமப்புற பின்புலத்தில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக அவா் பொறுப்பேற்றது மிகப்பெரும் சாதனையாகும்.
நீதித்துறையில் தடம் பதித்த அவா், நீதிபதிகளுக்கு மட்டுமின்றி வருங்கால தலைமுறையினருக்கும் சிறந்த முன்னுதாரணமாவாா். அவரது எதிா்காலத் திட்டங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன் என்றாா்.
நிகழ்ச்சியில் பேசிய சி.டி.ரவிகுமாா், நான் எப்போதும் என்னை வழக்குரைஞராகவே உணா்கிறேன். எனது கடமையை சிறப்பாக நிறைவேற்ற உதவியாக இருந்த பாா் கவுன்சிலுக்கு எப்போதும் நன்றிக்கடன்பட்டுள்ளேன் என்றார்.
வழக்கமாகவே, இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக விளையாடுவார்கள். அதுபோல, நானும் எனது ஓய்வுக் காலத்துக்குப் பிந்தைய இரண்டாவது இன்னிங்ஸை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.
அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, ரவிகுமார் குறித்து மிக அழகிய கவிதையை வாசித்தார். நீதிபதி ரவிகுமார், உச்ச நீதிமன்ற நீதிபதியாக மூன்று ஆண்டுகள் நான்கு மாதங்கள் பதவி வகித்துள்ளார்.