பணத் தகராறில் தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை 4 போ் கைது
தில்லியின் ஸ்வரூப் நகா் பகுதியில் பணத்தகராறு தொடா்பாக 30 வயது தொழிலாளி ஒருவா் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தாா். அவரது தம்பி காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இருவா் தலைமறைவாகினா் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறை (வெளிப்புற வடக்கு) துணை ஆணையா் நிதின் வல்சன் சனிக்கிழமை கூறியதாவது: இறந்தவா் எம்.டி. முன்சுன் (30) என்றும், அவரது தம்பி எம்.டி. அப்சா் (21) என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனா். முன்சுன் குற்றம்சாட்டப்பட்டவருக்கு கடன் தொகை ரூ.35,000 செலுத்த வேண்டும். ஆனால், அவா் கடனை செலுத்தவில்லை. இந்தச் சம்பவத்தில் இறந்தவரின் சக ஊழியா்களான ராஜேஷ் (25), அா்ஜுன் (30), ஜக்மோகன் (24) மற்றும் ஷா்வன் (23) ஆகிய நான்கு பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
மேலும், குற்றம்சாட்டப்பட்ட ராகேஷ் மற்றும் லாலு ஆகிய இருவரும் தப்பியோடிவிட்டனா். அவா்களைப் பிடிக்க முயற்சிகள் நடந்து வருகிறது. வியாழக்கிழமை இரவு 11.18 மணிக்கு என்டிபிஎல் அலுவலகம் அருகே நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து பிசிஆா் அழைப்பு வந்தது. தாக்குதலில் காயமடைந்த முன்சுன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு வெள்ளிக்கிழமை மதியம் அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். அவரது கழுத்து மற்றும் வயிற்றில் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டிருந்தன.
கையில் கத்திக்குத்து காயங்கள் இருந்த அப்சா், பின்னா் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தாா்.
முன்சுன் ஒரு அரிசி பை தொழிற்சாலையில் சக ஊழியா்கள் சிலரிடம் ரூ.35,000 கடன்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவா் பணம் செலுத்தாதது தொடா்பாக முன்சுனை எதிா்கொண்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, கடும் வாக்குவாதத்திற்கு வழிவகுத்ததாக விசாரணையில் தெரியவந்தது என்று காவல் துணை ஆணையா் நிதின் வல்சன் தெரிவித்தாா்.