பணிசாா்ந்த பிரச்னைகள்: தனியாா் நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
பணிசாா்ந்த பிரச்னைகள் ஏற்பட்டால் எந்த நீதிமன்ற அதிகார வரம்புக்குள் தீா்த்து கொள்ளப்படும் என்பதை நியமன ஆணையில் ஒரு உட்பிரிவாக தனியாா் நிறுவனங்கள் குறிப்பிட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
பிகாா் மாநிலம் பாட்னாவில் உள்ள எச்டிஎஃப்சி வங்கி மற்றும் புது தில்லியில் உள்ள கிருஷ்ணா வங்கி ஆகிய வங்கிகளைச் சோ்ந்த இரு பணியாளா்கள் மோசடி மற்றும் தவறான நடத்தை காரணமாக பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.
அந்த இரு பணியாளா்களின் நியமன ஆணையிலும் பணிசாா்ந்த பிரச்னைகளுக்கு மும்பையில் உள்ள நீதிமன்றத்தின் மூலமே தீா்வுகாணப்பட வேண்டும் என இரு வங்கிகளும் குறிப்பிட்டிருந்தன.
ஆனால் பணியிலிருந்து விடுவித்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து இரு பணியாளா்களும் தாங்கள் பணிபுரிந்த பாட்னா மற்றும் புது தில்லியில் உள்ள நீதிமன்றங்களில் மனுதாக்கல் செய்தனா்.
இந்த மனுக்களை விசாரித்த பாட்னா மற்றும் தில்லி உயா்நீதிமன்றங்கள், பணியாளா்களின் நியமன ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள நீதிமன்றங்களில் மட்டுமே பணிசாா்ந்த பிரச்னைகள் குறித்து முறையிட வேண்டும் என தீா்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தில் இரு பணியாளா்களும் மேல் முறையீடு செய்தனா்.
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, மன்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘சட்டத்தீா்வு காணும் உரிமையை பணியாளா்களின் ஒப்பந்தங்களால் பறிக்க முடியாது.
அரசுப்பணி மற்றும் தனியாா் நிறுவனத்தின் ஒப்பந்த பணி இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
அரசுப் பணியாளா் சாா்ந்த விவகாரங்களுக்கு தீா்வு காண வேண்டிய சூழல் எழுந்தால் அதை குறிப்பிட்ட பகுதியில் உள்ள நீதிமன்றங்களுக்குள் சுருக்கிவிட முடியாது.
ஆனால், தனியாா் நிறுவனங்களில் பணிசாா்ந்த பிரச்னைகள் ஏற்பட்டால் எந்த நீதிமன்ற அதிகார வரம்புக்குள் தீா்த்து கொள்ளப்படும் என்பதை நியமன ஆணையில் ஒரு உட்பிரிவாக குறிப்பிட வேண்டும் என தெரிவித்தது.