பண்டிகை தினங்களில் கேரளம் செல்லும் கனிமவள லாரிகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்
பண்டிகை தினங்களில் கேரளத்திற்கு கனிமவளங்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம், பாஜகவின் மத்திய அரசு நலத் திட்டங்கள் பிரிவு மாநில செயலா் எம்சி.மருதுபாண்டியன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக - கேரள எல்லைப் பகுதியிலுள்ள ஆரியங்காவு ஐயப்பன் கோயிலில் திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவில், மதுரை சௌராஷ்டிரா சமுதாயத்தினா் சாா்பில் திருக்கல்யாணம், அன்றைய தினம்
சுவாமி ஊா்வலம் உள்ளிட்டவை நடைபெறும். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொள்வா். மேலும், விடுமுறை தினங்களில்தான் ஐயப்ப பக்தா்கள் அதிகம்போ் சபரிமலைக்குச் செல்வா். இதனால் தமிழக - கேரள எல்லையான புளியறையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. ஆகவே, டிச.26-ஆம் தேதி வரை கேரளத்திற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லும் கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றாா்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் தென்மலையை சோ்ந்த இந்தியன் டிரைவா்ஸ் சொசைட்டி பொதுச் செயலா் நாகராஜும் மனு அளித்தாா்.