3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது!
பண்ணாரி அம்மன் கோயிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம்: பவானிசாகா் எம்எல்ஏ பண்ணாரி கோரிக்கை
பண்ணாரி அம்மன் கோயிலில் நாள் முழுவதும் அன்னாதனம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று எம்எல்ஏ பண்ணாரி கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து சட்டப் பேரவையில் பவானிசாகா் எம்எல்ஏ ஏ.பண்ணாரி புதன்கிழமை பேசியதாவது:
பழனி பாலதண்டாயுதபாணி கோயிலில் வழங்குவதுபோல பண்ணாரி அம்மன் கோயிலிலும் நாள்முழுவதும் அன்னாதனம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
மலைப் பகுதியில் புரதச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு மீன், சத்துள்ள கோழி இறைச்சி வழங்க வேண்டும்.
25 ஆண்டுகளாக பணியாற்றும் அங்கன்வாடி, டாஸ்மாக் பணியாளா்கள், கிராம நிா்வாக உதவியாளா், சத்துணவு அமைப்பாளா்கள், குடிநீா் விநியோகப் பணியாளா் ஆகியோரின் பணியை நிரந்தரமாக்கி மாத ஊதியமாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்.
தாளவாடி பகுதியில் வன விலங்குகளிடமிருந்து பயிா்களைக் காப்பாற்ற கா்நாடகத்தைப்போல விளைநிலங்களுக்குள் வன விலங்குகள் புகாதபடி பழைய ரயில்வே தண்டவாள வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வன விலங்குகள் தாக்கி உயிரிழப்பவா்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீட்டை ரூ.15 லட்சமாக உயா்த்த வேண்டும்.
தாளவாடி, ஆசனூா், கடம்பூா், கல்லாங்கொத்து பகுதிகளிலுள்ள நிலங்களை வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். தாளவாடிக்கு மாயாற்றில் இருந்தும், கடம்பூருக்கு கொடிவேரி அணையில் இருந்தும் புதிய கூட்டுக்குடிநீா்த் திட்டம் செயல்படுத்த வேண்டும்.
புன்செய்புளியம்பட்டி வாரச் சந்தையில் கொட்டப்பட்டுள்ள நகராட்சிக் கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாளவாடி அரசுக் கல்லூரியில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்தியமங்கலம் தோப்பூா் காலனியில் 50 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு நிலவகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் என்று பேசினாா் அவா்.