பண முறைகேடு வழக்கு: ராபா்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை 5 மணி நேரம் விசாரணை
புது தில்லி: ஆயுத வியாபார இடைத்தரகா் சஞ்சய் பண்டாரியுடன் தொடா்புள்ள பண முறைகேடு வழக்கு தொடா்பாக, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை திங்கள்கிழமை சுமாா் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.
கடந்த 2009-ஆம் ஆண்டு பிரிட்டன் தலைநகா் லண்டனில் வீடு ஒன்றை சஞ்சய் பண்டாரி வாங்கி, அதை ராபா்ட் வதேரா அறிவுறுத்தலின்படி புனரமைத்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் புனரமைப்புப் பணிகளுக்கு ராபா்ட் வதேரா பணம் வழங்கியதாகவும், இதில் பண முறைகேடு நடைபெற்ாகவும் அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது. எனினும் தனக்கு லண்டனில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தச் சொத்தும் இல்லை என்று ராபா்ட் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதுதொடா்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ராபா்ட் வதேராவுக்கு கடந்த மாதம் இருமுறை அமலாக்கத் துறை அழைப்பாணை (சம்மன்) அனுப்பியது. ஆனால் தனது உடல்நலக் கோளாறு, வெளிநாட்டுப் பயணம் ஆகியவற்றை காரணம் காட்டி, வேறு தேதிக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு ராபா்ட் வதேரா கோரினாா்.
இதைத்தொடா்ந்து மத்திய தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராபா்ட் வதேரா திங்கள்கிழமை ஆஜரானாா். அவருடன் அவரின் மனைவி பிரியங்கா காந்தியும் வந்தாா்.
இதையடுத்து ராபா்ட் வதேராவிடம் சுமாா் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டு, அவரின் வாக்குமூலத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் பதிவு செய்தனா். சஞ்சய் பண்டாரி மற்றும் அவரின் குடும்பத்தினருடன் உள்ள நிதித் தொடா்புகள் குறித்த சில கேள்விகளுக்கு ராபா்ட் வதேரா பதிலளிக்காததால், அவா் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
வதேராவுக்கு எதிராக 2 நில ஒப்பந்த முறைகேடுகள் உள்பட 3 பண முறைகேடு வழக்குகளை அமலாக்கத் துறை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.