Superman Review: ஜேம்ஸ் கன்னின் ஆக்ஷன், எமோஷன், அரசியல் - DC Universe-இன் அசத்தல...
27 ரன்களில் சுருண்ட மே.இ.தீவுகள்! போலண்ட் ஹாட்ரிக்! 6 விக்கெட்டுகளை அள்ளிய ஸ்டார்க்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 27 ரன்களில் சுருண்டது. இதனால், ஆஸ்திரேலிய அணி 176 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது.
மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை பெற்றிருந்த ஆஸ்திரேலிய அணி, கடைசிப் போட்டியான பகலிரவு பிங்க் டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 225 ரன்களும், மேற்கிந்திய தீவுகள் அணி 143 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 121 ரன்களுக்கு சுருண்டது. இதனால், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 194 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
எளிய இலக்கை நோக்கிய களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு முதல் பந்திலேயே போட்டியின் முடிவைக் காண்பித்தார் மிட்செல் ஸ்டார்க். ஆட்டத்தின் முதல் பந்தை எதிர்கொண்ட ஜான் கேம்பல் விக்கெட் கீப்பர் ஜோஸ் இங்லீஸிடம் கேட்சானார். முதல் கோணல் மேற்கிந்திய தீவுகளுக்கு முற்றும் கோணலாக அமைந்தது. அடுத்துவந்த கெவ்லான் ஆண்டர்சன்(0), பிரண்டன் கிங்(0) ஆகியோரும் முதல் ஓவரில் மிட்செல் ஸ்டார்க் வீசிய வலையில் வீழ்ந்தனர்.
மைக்கில் லூயிஸ் 4 ரன்களில் வெளியேற, கேப்டன் ராஸ்டன் சேஸும் டக் அவுட்டாக, ஷாய் ஹோப் 2 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். மேற்கிந்திய தீவுகள் அணியில் ஜஸ்டின்(11 ரன்கள்) தவிர்த்து யாரும் இரட்டை இலக்கத்தை தாண்டவில்லை. 11 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி மிகுந்த பரிதவிப்புக்குள்ளானது.
மிட்செல் ஸ்டார்க்கின் வேகத்தில் நடுங்கிக் கொண்டிருந்த பேட்ஸ்மேன்களுக்கு போலண்ட்டும் ஆட்டம் காட்டினார். போலண்ட் வீசிய 14-வது ஓவரில் ஜஸ்டின், சமர் ஜோசப், வாரிகன் ஆகிய மூவரும் அடுத்தது வீழ்ந்தனர். இதன் மூலம், போலண்ட் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.
மேற்கிந்திய தீவுகள் அணி வெறும் 14.3 ஓவர்களில் 27 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 176 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் 7 பேர் ரன் ஏதுமின்றி டக்-அவுட்டாகினர்.
மேலும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது மிகக் குறைந்த ஸ்கோராகவும் இது பதிவானது. [இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில்(1954/55) நியூசிலாந்து 26 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகியிருந்தது]
ஆஸ்திரேலிய அணித் தரப்பில் 7.3 ஓவர்கள் வீசிய மிட்செல் ஸ்டார்க், வெறும் 9 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். அதில், 4 மெய்டன்களும் அடங்கும். ஸ்காட் போலண்ட் 2 ஓவர்கள் பந்து வீசி 3 விக்கெட்டுகளும், ஜோஸ் ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. 100-வது போட்டியில் விளையாடி இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 7 விக்கெட்டுளை வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தியுள்ளார்.
Starc takes 6 wickets for 9 runs as West Indies routed for 27 in Kingston
இதையும் படிக்க :ஜடேஜா போராட்டம் வீண்! இங்கிலாந்து த்ரில் வெற்றி!
MITCHELL STARC: 7.3-4-9-6
— Johns. (@CricCrazyJohns) July 15, 2025
- WEST INDIES BOWLED OUT FOR JUST 27 RUNS IN THE SECOND INNINGS....!!!! pic.twitter.com/Z3tFsjJalT