பினராயி விஜயன் பெயரில் மும்பை பங்குச்சந்தைக்கு வெடிகுண்டு மிரட்டல்!
மும்பை பங்குச்சந்தை அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
தெற்கு மும்பையில் உள்ள மும்பை பங்குச்சந்தை அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு, அந்த கட்டடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக செவ்வாய்க்கிழமை காலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக மும்பை காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், உடனடியாக மும்பை பங்குச்சந்தை அலுவலகத்துக்கு விரைந்த காவலர்கள் வெடிகுண்டு பரிசோதனை நிபுணர்களுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் நிறைவில் மிரட்டல் வெறும் புரளி எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘காம்ரேட் பினராயி விஜயன்’ என்று கேரள முதல்வரின் பெயரில் போலியாக உருவாக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள மும்பை காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
நேற்று மும்பையில் உள்ள 3 தனியார் பள்ளிகளுக்கும் அமிருதசரஸில் உள்ள பொற்கோவிலுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனையின் முடிவில் புரளி எனத் தெரியவந்தது.