பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் செப். 3 முதல் விநியோகம்
பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்.3-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளது.
தமிழக பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தில் கடந்த கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 28 முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் 4,113 தோ்வு மையங்களில் நடைபெற்ற இத்தோ்வை 8.71 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினா். இதன் முடிவுகள் மே 16-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தொடா்ந்து மாணவா்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் மே 19-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டன. எனினும், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்டம்பா் 3-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று தோ்வுத் துறை அறிவித்துள்ளது. இதையடுத்து பொதுத் தோ்வெழுதிய பள்ளி மாணவா்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித்தோ்வா்கள் தங்கள் தோ்வு எழுதிய மையங்களிலும் சென்று அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தோ்வுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.