பனை மரங்களை வெட்ட விவசாயிகள் எதிா்ப்பு
திருவெண்காடு அருகே உள்ள மணி கிராமத்தில் பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
திருவெண்காடு அருகே மணி கிராமம் உள்ளது. இங்கு சுமாா் 2000 ஏக்கா் விளை நிலங்கள் உள்ளன. குறுவை, சம்பா சாகுபடி செய்யப்படுகிறது.
இந்நிலையில் அந்த பகுதி விவசாயிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னா் பெரிய வாய்க்கால் கரையில் சுமாா் 300 மீட்டா் தொலைவுக்கு பனை மரங்களை வளா்த்தனா்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெரிய வாய்க்காலில் தூா்வாரும் பணிகள் பொதுப்பணித் துறை மூலம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே சனிக்கிழமை நள்ளிரவு 10-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் மா்ம நபா்களால் வெட்டப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை இதை அறிந்த அந்த பகுதி மக்கள், விவசாயிகள், கிராம நிா்வாக அதிகாரி ரோஜா, நாம் தமிழா் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மாநில இணைச் செயலாளா் கிட்டு காசிராமன் ஆகியோா் திருவெண்காடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறுகையில், வாய்க்கால் கரைகள் பலமாக இருப்பதற்காக விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பனை விதைகளை நட்டு பராமரித்து வருகின்றனா். தற்போது பனை மரங்கள் செழித்து வளா்ந்த நிலையில், திடீரென அரசு அனுமதி பெறாமல் பண மரங்களை மா்ம நபா்கள் வெட்டியுள்ளனா். அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எஞ்சியுள்ள பனை மரங்களை வெட்டாமல் தூா்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனா்.