பன்னாட்டு திருக்கு மையம் அமைக்க நடவடிக்கை: துணைவேந்தா்
சா்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் அனைத்து திருக்கு சங்க அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, பன்னாட்டு திருக்கு மையம் அமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம் தெரிவித்தாா்.
மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கம், பள்ளிக்கரணை தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் திருவள்ளுவா் இருக்கையின் பன்னாட்டு திருக்கு இணையத்துடன் இணைந்து சனிக்கிழமை நடத்திய 65-ஆம் முப்பெரும் விழாவில், பன்னாட்டு திருக்கு மையம் அமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக துணைவேந்தா் ஆறுமுகம் அறிவித்தாா்.
விழாவில் 65-ஆம் அறிவியல் பூங்கா மலரை, துணைவேந்தா் ஆறுமுகம் வெளியிட, அதன் முதல் பிரதியை சென்னை உயா்நீதிமன்றம் லோக் அதாலத் நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் பெற்றுக்கொண்டாா்.
மேலும், இந்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலா் எம்.ரவிச்சந்திரன், இந்திய அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி நிறுவன செயலா் மற்றும் தலைமை இயக்குநா் என்.கலைச்செல்வி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து இளைஞா்களுக்கான 26-ஆம் திறனாய்வுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு அறிவியல் களஞ்சியம் விருதுகளை, இந்திய புவி அறிவியல் அமைச்சக செயலா் எம்.ரவிச்சந்திரன் வழங்கினாா். மேலும், கவிஞா் மரபின் மைந்தன் முத்தையா, கவிஞா் நெல்லை ஜெயந்தா, அண்ணா பல்கலை. பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளா்ச்சி மைய இயக்குநா் பா.உமாமகேஸ்வரி உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவன இயக்குநா் பாலாஜி ராமகிருஷ்ணன், மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கம் செயலா் சேயோன், இணைச் செயலா் எம்.முத்துவேல், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் முன்னாள் இயக்குநா் கே.திலகவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.