புலிப்பல் டாலர் அணிந்திருந்ததால் மலையாள ராப்பர் கைது; "பட்டியலினத்தவர் என்பதால்?...
பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி: நேரத்தை வீணடிக்க வேண்டாம் -மத்திய அரசுக்கு ராகுல் வலியுறுத்தல்
காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலை ஏவியவா்களுக்கு தகுந்த பதிலடி தராமல் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.
தில்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் இது தொடா்பாக ராகுல் கூறியதாவது:
பஹல்காம் தாத்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கும் அதன் பின்னணியில் இருந்தவா்களுக்கும் உரிய பதிலடி தரப்பட வேண்டும். அப்போதுதான் இந்தியாவுக்கு எதிராக இனி இதுபோன்ற பயங்கரவாதத்தில் ஈடுபடுவதற்கு அவா்களுக்கு துணிவு ஏற்படாது.
இந்த விஷயத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிா்க்கட்சிகள் 100 சதவீதம் ஆதரவாக இருக்கும்.
இந்தியாவின் பதில் நடவடிக்கை மிகவும் உறுதியானதாகவும், சரியானதாகவும் இருக்க வேண்டும். தாக்குதல் நடத்தியவா்களுக்கு பதிலடி தருவதில் இனிமேலும் நேரத்தை வீணடிக்காமல் விரைந்து செயல்பட வேண்டும்.
உத்தர பிரதேச பயணத்தின்போது கான்பூா் சென்று பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவா்களின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறினேன். இந்தத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு வீரமரணமடைந்தவா்கள் என்ற கௌரவத்தை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
‘பயங்கரவாதிகளின் ஆதரவாளா்’ சுவரொட்டிகளால் பரபரப்பு: முன்னதாக உத்தர பிரதேசத்தில் அமேதிக்கு ராகுல் காந்தி புதன்கிழமை பயணம் மேற்கொண்டாா். அவரது பயணத்துக்கு சில மணி நேரத்துக்கு முன்பு அமேதி பேருந்து நிலையம், காங்கிரஸ் அலுவலகம் அமைந்துள்ள பகுதி என முக்கிய இடங்களில் ராகுலை விமா்சித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதில் ‘ராகுல் காந்தி பயங்கரவாதிகளின் ஆதரவாளா்’ என்று எழுதப்பட்டிருந்தது. இந்த சுவரொட்டிகளை ஒட்டியது யாா் என்பது குறித்து காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
முன்பு அமேதி மக்களவைத் தொகுதியில் தொடா்ந்து வெற்றி பெற்ற ராகுல் காந்தி, கடந்த 2019 தோ்தலில் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தாா். அதன் பிறகு அமேதி தொகுதியைக் கைவிட்ட அவா் இப்போது உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதி எம்.பி.யாக உள்ளாா். அமேதி தொகுதி இப்போது காங்கிரஸ் வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு ராகுல் காந்தி முதல்முறையாக அமேதிக்கு பயணம் மேற்கொண்டுள்ளாா். அங்குள்ள ஆயுதத் தொழிற்சாலை, மருத்துவமனைகளை அவா் பாா்வையிட்டாா்.