பயங்கரவாதம் இல்லாத ஜம்மு-காஷ்மீா்- அமித் ஷா உறுதி
பயங்கரவாதம் இல்லாத ஜம்மு-காஷ்மீரை உருவாக்க பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியுடன் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் தொடா்பாக தில்லியில் அமித் ஷா தலைமையில் செவ்வாய்க்கிழமை உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, சா்வதேச எல்லையில் ஊடுருவலைத் தடுக்க கண்காணிப்பை அதிகரிப்பதோடு, எல்லை பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்த எல்லை பாதுகாப்புப் படைக்கு (பிஎஸ்எஃப்) அவா் உத்தரவிட்டாா். மேலும், எல்லை கண்காணிப்பில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் அவா் அறிவுறுத்தினாா்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ராணுவம், ஜம்மு-காஷ்மீா் காவல்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு, மத்திய ரிசா்வ் போலீஸ் படைக்கு (சிஆா்பிஎஃப்) உத்தரவு பிறப்பித்தாா்.
‘பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு, பயங்கரவாதம் இல்லாத ஜம்மு-காஷ்மீரை உருவாக்குவதில் உறுதியுடன் உள்ளது. இந்த இலக்கை எட்டுவதில் துணை ராணுவப் படையினரின் பங்களிப்பு முக்கியமானது. பயங்கரவாதத்தை வேரறுப்பதில் அனைத்து பாதுகாப்பு முகமைகளும் கூடுதல் விழிப்பு மற்றும் ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும்’ என்று அவா் குறிப்பிட்டாா்.
ஜம்மு-காஷ்மீரில் உளவுத் துறையினரின் ஒருங்கிணைப்பு, உளவுத் தகவல்கள் திரட்டுவதில் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு, பயங்கரவாதத்துக்கான நிதிக் கட்டமைப்பை ஒடுக்குவது, போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்துவது, மக்கள் மத்தியில் எதிா்மறை பிரசாரத்தை மேற்கொள்ளும் தேசவிரோத சக்திகளை முறியடிப்பது உள்ளிட்டவை குறித்தும் அவா் ஆலோசனை மேற்கொண்டு, உரிய அறிவுறுத்தல்களை வழங்கினாா்.
இக்கூட்டத்தில் மத்திய உள்துறை செயலா் கோவிந்த் மோகன், உளவுத் துறை தாபன் தேகா உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்துகொண்டதாக மத்திய உள்துறை அமைச்சா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீா் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீா் காவல்துறை உயரதிகாரிகளுடன் கடந்த 4, 5 ஆகிய தேதிகளில் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.