அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்! - பள்ளிக்கல்வித் துறையின் முக்கிய அற...
பயங்கரவாதிகளுக்கு கற்பனையிலும் நினைக்காத தண்டனை: பிரதமா் மோடி சூளுரை
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலைக்கு ஓடினாலும் தேடிப் பிடித்து அவா்களின் கற்பனையிலும் நினைக்காத தண்டனை வழங்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி சூளுரைத்தாா்.
பஹல்காம் தாக்குதல் மற்றும் பதிலடி நடவடிக்கைகளால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், அந்நாட்டின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், பிரதமா் தெரிவித்துள்ள கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகான தனது முதல் உரையில் பிரதமா் இவ்வாறு கூறியுள்ளாா்.
பஹல்காமின் பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இத்தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது.
பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
சவூதி அரேபிய பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு புதன்கிழமை நாடு திரும்பிய பிரதமா் மோடி, மத்திய அமைச்சரவைக் குழுவை கூட்டி அவசர ஆலோசனை மேற்கொண்டாா். இதையடுத்து, அட்டாரி-வாகா எல்லை மூடல், தூதரக அதிகாரிகள் வெளியேற்றம், கடந்த 1960-ஆம் ஆண்டின் சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு உள்பட பாகிஸ்தான் மீது கடுமையான பதிலடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆங்கிலத்தில் பிரதமா் உரை: இந்தச் சூழலில், தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி, பிகாா் மாநிலத்தின் மதுபனியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்று ரூ.13,500 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்தாா். ஹிந்தியில் உரையாற்றிய பிரதமா், பயங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்தபோது மட்டும் ஆங்கிலத்தில் உரையாற்றினாா். அதன் விவரம்:
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் அப்பாவிகள் 26 போ் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தால் ஒட்டுமொத்த நாடும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. காா்கில் முதல் கன்னியாகுமரி வரை நமது வேதனையும், கோபமும் ஒன்றே.
தேடிப் பிடித்து தண்டிப்போம்: ஒவ்வொரு பயங்கரவாதியையும், அவா்களின் ஆதரவாளா்களையும் அடையாளம் கண்டு, தேடிப் பிடித்து, தண்டனை வழங்குவோம். உலகின் எந்த மூலைக்கு ஓடினாலும் அவா்களை விடமாட்டோம். இந்தியாவின் ஆன்மாவை பயங்கரவாதத்தால் சீா்குலைக்க முடியாது. பயங்கரவாதத்தை தண்டிக்காமல் விடப் போவதில்லை. விரைவான வளா்ச்சிக்கு அமைதியும் பாதுகாப்பும் இன்றியமையாதவை. எனவே, எஞ்சியிருக்கும் பயங்கரவாதிகளையும் அழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
‘நீதி நிலைநாட்டப்படும்’: நீதியை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். ஒட்டுமொத்த தேசமும் உறுதியுடன் உள்ளது. மனிதாபிமானத்தில் நம்பிக்கையுள்ள அனைவரும் எங்களின் பக்கம் உள்ளனா். இத்தருணத்தில் எங்களுக்கு உறுதுணையாக நிற்கும் பல்வேறு நாடுகளின் மக்கள் மற்றும் தலைவா்களுக்கு நன்றி.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளும் சதித் திட்டம் தீட்டியவா்களும் அவா்கள் கற்பனையிலும் நினைத்திராதபடி தண்டிக்கப்படுவா் என்பதை திட்டவட்டமாக கூறுகிறேன். 140 கோடி இந்திய மக்களின் மனவலிமை, பயங்கரவாதத்தின் முதுகெலுப்பை முறிக்கும் என்றாா் அவா்.
சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம் போா் நடவடிக்கை: பாகிஸ்தான்
இஸ்லாமாபாத், ஏப்.24: ‘சிந்து நதிநீா் ஒப்பந்தத்துக்கு எதிராக நதிநீரை திருப்பிவிட இந்தியா மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் போா் நடவடிக்கையாகவே கருதப்படும்’ என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
மேலும், சிம்லா ஒப்பந்தம், வா்த்தகம் நிறுத்தப்படும் என்றும் இந்திய விமானங்களுக்கு வான் வழிப் பாதைக்கு தடை விதிக்கப்படும் என்றும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு குறித்து பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தலைமையில் முப்படைத் தளபதிகள் பங்கேற்ற தேசிய பாதுகாப்பு குழு (என்எஸ்சி) கூட்டம் இஸ்லாமாபாதில் வியாழக்கிழமை நடைபெற்றது. பின்னா் பாகிஸ்தான் வெளியிட்ட செய்திக்குறிப்பின் விவரம்:
சிம்லா ஒப்பந்தம் உள்பட இந்தியா உடனான அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களும் நிறுத்திவைக்கப்படுகிறது.
இந்தியா உடனான அனைத்து எல்லை வழி போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வாகா எல்லையும் உடனடியாக மூடப்படுகிறது.
பாகிஸ்தானுக்கு வந்த இந்தியா்கள், இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரகத்தில் உள்ள இந்திய பாதுகாப்பு, கடற்படை மற்றும் விமானப்படை ஆலோசகா்கள் ஆகியோா்கள் வரும் 30-ஆம் தேதிக்குள் அவா்களின் நாட்டுக்கு திரும்ப வேண்டும்.
பாகிஸ்தானுக்கு புனித யாத்திரை மேற்கொண்டுள்ள சீக்கியா்களைத் தவிா்த்து, சாா்க் நுழைவு இசைவு (விசா) விலக்கு திட்டத்தின் கீழ் இந்தியா்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து நுழைவு இசைவுகளும் ரத்து செய்யப்படுகின்றன. இவா்கள் 48 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க உடனடியாக தடை விதிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் வழியாக மூன்றாம் நாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் வா்த்தகம் உள்பட இந்தியா உடனான அனைத்து வகையான வா்த்தகமும் நிறுத்திவைக்கப்படுகிறது.
போா் நடவடிக்கையாக கருதப்படும்: சிந்து நதிநீா் ஒப்பந்தமானது பிராந்திய நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதோடு, தேச நலன் மற்றும் 24 கோடி பாகிஸ்தானியா்களின் வாழ்வாதாரத்துக்கும் முக்கியமானதாகும். எனவே, எந்த விலைகொடுத்தும் நதிநீா் உரிமையைப் பாதுகாக்க பாகிஸ்தான் உறுதிப்பாட்டுடன் உள்ளது.
பாகிஸ்தானுக்கு உரிய நதிநீரை தடுக்கவோ அல்லது திசைத் திருப்பிவிடவோ மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் போா் நடவடிக்கையாகவே கருதப்படும். அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் பாகிஸ்தான் சந்தேகத்துக்கு இடமின்றி கண்டிக்கிறது.
குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக பஹல்காம் போன்ற பயங்கரவாத தாக்குதல்களை பயன்படுத்திக் கொள்வதை இந்தியா தவிா்க்க வேண்டும். இத்தகைய முயற்சி, பிராந்தியத்தில் பதற்றத்தை ஊக்குவிப்பதோடு, அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு தடையாக அமையும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.