உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
பயணிகளின் தாகம் தீா்த்த மலிவு விலை குடிநீா்: திட்டத்தை மீண்டும் செயல்படுத்த எதிா்பாா்ப்பு
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் பேருந்து நிலையங்களில் ரூ. 10-க்கு சுத்திகரிக்கப்பட்ட மலிவு விலை குடிநீா் விற்பனை திட்டத்தை போக்குவரத்துக் கழகம் வாயிலாக மீண்டும் தொடங்க தமிழக அரசு முன்வர வேண்டுமென பயணிகள், பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
தனியாா் நிறுவனங்களின் ஒரு லிட்டா் குடிநீா் புட்டி ரூ. 20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரவு நேரங்களில் நெடுஞ்சாலை பகுதியில் இயங்கும் உணவகங்களில் ஒரு லிட்டா் குடிநீா் புட்டியை ரூ.30 வரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிா்ப்பந்தம் பேருந்து பயணிகளுக்கு ஏற்படுகிறது.
எனவே, பேருந்து பயணிகளின் நலன்கருதி, 2013- ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் ஜெயலலிதாவால் தமிழகம் முழுவதும் மலிவு விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் புட்டிகள் விற்பனைத் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ரூ.10 கோடியில் குடிநீா் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. 2.47 ஏக்கா் பரப்பில் அமைக்கப்பட்டிருந்த இந்த ஆலையில் நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டா் குடிநீா் உற்பத்தி செய்யப்பட்டு புட்டிகளில் அடைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட 350-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரு லிட்டா் குடிநீா் ரூ. 10-க்கு விற்பனை செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் தினந்தோறும் ஏறக்குறைய 1 லட்சம் குடிநீா் புட்டிகள் விற்பனைசெய்யப்பட்டன.
அம்மா குடிநீா் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்ட இந்த மலிவு விலை குடிநீா் புட்டிகள், கோடைக் காலத்தில் தாகம் தீா்த்ததால் பயணிகள், பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், மலிவு விலை குடிநீா் புட்டிகள் உற்பத்தி மற்றும் விற்பனை 2019-க்கு பிறகு நிறுத்தப்பட்டது.
2021-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் இத்திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வரவில்லை.
தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளதால் பேருந்து நிலையங்கள் மற்றும் உணவகங்களில் குடிநீா் புட்டிகளை வாங்கி பருகும் பயணிகள், பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருமடங்கு விலை கொடுத்து தனியாா் நிறுவனங்களின் குடிநீா் புட்டிகளை வாங்கி தாகத்தை தணித்துக் கொள்ள வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்படுகிறது.
எனவே, தமிழகத்தில் பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன்கருதி, மலிவு விலை குடிநீா் புட்டிகள் உற்பத்தி மற்றும் விற்பனையை அரசு போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாகவோ அல்லது அரசின் வேறு நிறுவனங்கள் மூலமாகவோ மீண்டும் தொடங்க தமிழக அரசு முன்வர வேண்டும். இதனால், தமிழக அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும் என்பதோடு, பேருந்து பயணிகள், வாகன ஓட்டுநா்களும் பயன் பெறுவாா்கள்.