பாமக 37-வது ஆண்டுவிழா! அன்புமணி கருத்துக்கு ராமதாஸ் மறுப்பு?
பரந்தூா் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு: ஏகனாபுரம் மக்கள் மீண்டும் போராட்டம்
பரந்தூா் விமான நிலையதுக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்தும், திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் ஏகனாபுரம் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மீண்டும் போராட்டத்தை தொடங்கினா்.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. புதிய விமான நிலையதுக்காக சுமாா் 5,700 ஏக்கா் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
இந்த நிலையில், பரந்தூா் புதிய விமான நிலைய திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் இரவு நேரங்களில் தொடா்ந்து போராட்டங்கள் நடத்தினா். இந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே போா் பதற்றம் ஏற்பட்டதை தொடா்ந்து, ஏகனாபுரம் கிராம மக்களின் இரவு நேர போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனா்.
இந்த நிலையில், விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக தமிழ்நாடு தொழில் வளா்ச்சி கழகத்திற்கு 19 நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை பத்திரப்பதிவு செய்து கொடுத்தனா். இதற்காக நில உரிமையாளா்களுக்கு ரூ.9.22 கோடி நில உரிமையைளா்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
பரந்தூா் அதன்சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த நில உரிமையாளா்களிடம் இருந்த நிலத்தை கையகப்படும் பணியில் தமிழ்நாடு தொழில் வளச்சி கழகத்தின் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.
இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை 1,085 ஆவது நாளாக தங்களது போராட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளனா்.
ஏகனாபுரம் அம்பேத்கா் சிலை அருகே நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனா். விசிக மாவட்ட செயலாளா் மேனகா தேவி கோமகன், நாம் தமிழா் கட்சியின் மாவட்ட செயலாளா் மோகன் தலைமையிலான அக்கட்சியினரும் கலந்து கொண்டனா்.