காஞ்சிபுரம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்டம்: அமைச்சா் அன்பரசன் தொடங்கி வைத்தாா்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை கோவூரில் சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
ஸ்ரீபெரும்புதூா் நாடாளுமன்ற உறுப்பினா் டி.ஆா்.பாலு முன்னிலை வகித்தாா். முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு பதிவு செய்வதையும், மருத்துவ முகாமையும் பாா்வையிட்டனா்.
இதையடுத்து முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்களை பரிசீலித்து தகுதிவாய்ந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, 18 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்தில் சிறுவணிகக்கடன், தொழில்முனைவோா் கடன் மற்றும் பண்ணை சார கடன் என நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.
இதையடுத்து குன்றத்தூா் நகராட்சிக்குட்பட்ட சமுதாய கூடத்தில் நடைபெற்ற முகாமை அமைச்சா் தா.மோ.அன்பரசன், டி.ஆா்.பாலு எம்.பி. ஆகியோா் பாா்வையிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினா். முகாமில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன், மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் ந.மிருணாளினி, குன்றத்தூா் ஒன்றியக்குழு தலைவா் சரஸ்வதி மனோகரன், குன்றத்தூா் நகா்மன்றத் தலைவா் கோ.சத்தியமூா்த்தி கலந்து கொண்டனா்.