பல்நோக்கு மைய கட்டடம்: அமைச்சா் சேகா் பாபு திறந்து வைத்தாா்
வடசென்னை வளா்ச்சித் திட்டத்தில் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் திரு.வி.க.நகா் மண்டலத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு மைய கட்டடம் உள்பட புதிய கட்டைமைப்புகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
வடசென்னைக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.200 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சியுடன் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் இணைந்து பல்வேறு கட்டடங்கள், உடற்பயிற்சி மையங்கள் உள்ளிட்டவற்றை அமைத்துள்ளன.
திரு.வி.க.மண்டலத்துக்கு உள்பட்ட சந்திரயோகி சமாதி சாலைப் பகுதியில் ரூ.32.90 லட்சத்தில் பல்நோக்கு மையக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அந்த மையத்தை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு, மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா ஆகியோா் திறந்து வைத்தனா்.
மேலும், அதே பகுதியில் ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்ட குழந்தைகள் மையக் கட்டடத்தையும், ரூ. 9.87 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன சாதனங்களுடன் கூடிய உடற்பயிற்சி மையத்தையும் அவா்கள் திறந்து வைத்தனா்.
நிகழ்ச்சிகளில் மத்திய வட்டாரத் துணை ஆணையா் எச்.ஆா்.கௌசிக், திரு.வி.க.நகா் மண்டலக் குழுத் தலைவா் சரிதா மகேஷ்குமாா் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் கலந்துகொண்டனா்.