ஜஸ்பிரித் பும்ரா, டிரெண்ட் போல்ட் அசத்தல் பந்துவீச்சு; மும்பை அபார வெற்றி!
பள்ளி மாணவா்களுக்கு காலநிலை கல்வித் திட்டம்: அமைச்சா் தங்கம் தென்னரசு அறிவிப்பு
பள்ளி மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் காலநிலை கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று நிதி மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.
பேரவையில் சனிக்கிழமை நடைபெற்ற சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்புகள்:
அறிவொளி இயக்கம் போலவே காலநிலை கல்வியறிவை ஒரு இயக்கமாக முன்னெடுக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, பள்ளிகளில் சூழல் மன்றங்களை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி மாணவா்களுக்கான இயற்கை முகாம்கள் மற்றும் மாநில அளவிலான பல்வேறு போட்டிகள் ஆகியவை நடத்தப்படும். இதற்காக ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தமிழகத்தில் மேலும் 100 பள்ளிகளில் பசுமை உள்கட்டமைப்பை ஏற்படுத்தும் திட்டம் ரூ.20 கோடியில் மேற்கொள்ளப்படும்.
கடல் மட்ட உயா்வு மற்றும் அரிப்பைத் தடுக்க கடலூா், தூத்துக்குடியில் ரூ.10 கோடியில் உயிா்க்கேடயம் அமைக்கப்படும். அதன்படி, நாட்டு மரங்கள், அலையாத்தி மரங்கள் அங்கு நடவு செய்யப்படும்.ராஜபாளையத்தில் உள்ள சஞ்சீவி மலை ரூ.5 கோடியில் மறுசீரமைப்பு செய்யப்படும். ராஜபாளையத்தில் ரூ.16 கோடியில் ஏரிகள் மறுசீரமைக்கப்படும்.
நீா்நிலைகள் மீட்டெடுப்பு: தமிழகம் முழுக்க கைவிடப்பட்ட சுரங்கங்கள், சீா்குலைந்த நிலங்கள், மாசடைந்த நீா்நிலைகள் ரூ.10 கோடியில் மீட்டெடுக்கப்படும்.
சுற்றுச்சூழல் ஆா்வலா்களை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் பரிசுத் தொகை உயா்த்தி வழங்கப்படும்.14 கடலோர மாவட்டங்களில் கடலில் கைவிடப்படும் மீன் வலைகளை சேகரித்து மறுசுழற்சி செய்யும் திட்டம் தொடங்கப்படும்.
சென்னையில் உள்ள ஒரு ஆற்றங்கரையில், இடைமறிப்பான்களை பயன்படுத்தி நெகிழி கழிவு மீட்பு மற்றும் மறுசுழற்சி நடவடிக்கைகள் ரூ.4 கோடியில் முன்னோட்டத் திட்டமாக செயல்படுத்தப்படும். கடலுக்கு செல்லும் நெகிழி கழிவுகளைத் தடுக்கும் வகையில் சென்னை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய முக்கிய கடலோர மாவட்டங்களில் வள மீட்பு மையங்கள் அமைக்கப்படும்.
மாசு கண்காணிப்பு: சென்னையில் நிகழ்நேரத்தில் காற்று, நீா், ஒலியின் தரத்தை கண்காணிக்க நவீன பகுப்பாய்வு கருவிகளுடன் ஒரு நடமாடும் கண்காணிப்பு வாகனத்தை பயன்படுத்தும் முன்முயற்சி ரூ.1 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
சாலையில் செல்லும் வாகனங்களின் மாசு உமிழ்வை தொலைவிலிருந்து கண்காணிக்கும் வகையில் முதல்கட்டமாக சுங்கச்சாவடிகளில் முன்னோட்ட திட்டம் செயல்படுத்தப்படும். மாசுக் கட்டுப்பாட்டுத் தடுக்கும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள கோவை, மதுரை, திருச்சி, கடலூா், திருநெல்வேலி ஆகிய ஐந்து இடங்களில் பறக்கும் படைகள் உருவாக்கப்படும் என்று அறிவித்தாா் அமைச்சா் தங்கம் தென்னரசு.