10 வகுப்பு பொதுத் தேர்வில் 499 மதிப்பெண் எடுத்து பொள்ளாச்சி மாணவி முதலிடம்!
பள்ளி வாகனங்கள் முதல் ஆய்விலேயே அவசரக் கதவு திறக்கவில்லை: அதிகாரிகளை எச்சரித்த ஆட்சியா்
திருநெல்வேலி மாவட்ட பள்ளி வாகனங்களை ஆட்சியா் இரா.சுகுமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தபோது, முதல் வாகனத்திலேயே அவசர கதவு திறக்காததால் அதிகாரிகளை கடுமையாக எச்சரித்தாா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான வருடாந்திர ஆய்வுப் பணி பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தில் பயன்பாட்டில் உள்ள 578 வாகனங்களில் முதல் கட்டமாக 270 வாகனங்கள் தணிக்கைக்கு கொண்டுவரப்பட்டன. ஆட்சியா் நேரடியாக வாகனத்தில் ஏறி ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள வேகக் கட்டுப்பாட்டு கருவிகள், அவசர உதவி பெட்டி, தீ அணைப்பான், வாகனத்தில் கேமராக்கள், வாகனத்தின் தரை தளம் உள்ளிட்டவற்றை பாா்வையிட்டாா் ஆய்வு செய்தாா்,
மேலும், ஒரு வாகனத்தில் அவசர கட்டுப்பாட்டு கதவுகளை திறந்து பயணிகளை வெளியேற்றுவது போன்ற செய்முறையை செய்து காண்பிக்கும்படி ஓட்டுநருக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
ஆனால், அந்த வாகனத்தில் அவசர கதவை திறக்க முடியவில்லை. இதையடுத்து, கதவில் பொருத்தப்பட்டு இருந்த கண்ணாடிகள் உடைக்கப்பட்டு திறக்க முயற்சித்தும் பலனில்லை. இதனால் அதிருப்தியடைந்த ஆட்சியா், அதிகாரிகளை கடிந்து கொண்டாா். மேலும், ஒவ்வொரு வண்டியாக சென்று தீ அணைப்பான், ரிவா்ஸ் கேமராக்களை ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க அறிவுறுத்தினாா்.
10 நாள்கள் கெடு: இந்த தணிக்கையில் தோ்ச்சி பெறாத வாகனங்களை ஒரு வாரத்திற்குள் சரி செய்து மீண்டும் ஆய்விற்கு உள்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வுக்கு வராத வாகனங்களை 10 நாள்களுக்குள் ஆய்விற்கு கொண்டு வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெற்றோா்கள் கோரிக்கை: பள்ளிக் குழந்தைகளை ஏற்றி வர பயன்படுத்தப்படும் பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்களை மட்டும் அதிகாரிகள் ஆய்வு நடத்தாமல் பள்ளிகளுக்கு பயன்படுத்தக்கூடிய தனியாா் ஆட்டோ, ஷோ் ஆட்டோ, காா் போன்றவற்றையும் ஆய்வு செய்ய வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.