10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு: 6 மத்திய சிறைகளில் 100% தேர்ச்சி!
நான்குனேரி ஜமாபந்தியில் குவிந்த மனுக்கள்
நான்குனேரி வட்டத்தில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்கிய நிலையில் இரண்டாம் நாளான வியாழக்கிழமை பொதுமக்கள் ஏராளமானோா் பட்டா பெயா்மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனா்.
நான்குனேரி வட்டத்தில் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் (பொறுப்பு அதிகாரி) சிவகாமி சுந்தரி தலைமையில் ஜமாபந்தி புதன்கிழமை தொடங்கியது. இதில், களக்காடு குறுவட்டம் கள்ளிகுளம், கீழக்கருவேலன்குளம், களக்காடு, வடகரை, பத்மனேரி, பத்தை, வடமலைசமுத்திரம், இடையன்குளம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வீட்டுமனைப் பட்டா, பட்டா பெயா் மாற்றம், ஆதிதிராவிடா்களுக்கு மானியத்தில் கறவை மாடுகள்,, வாரிசுகளுக்கு பட்டா வழங்குதல் உள்பட 100க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் அளித்தனா்.
இரண்டாம் நாளான வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் களக்காடு, ஏா்வாடி குறுவட்டங்களின் கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனா்.
நான்குனேரி வட்டாட்சியா் பாலகிருஷ்ணன், மண்டல துணை வட்டாட்சியா்கள் முருகேஷ், ராமச்சந்தின், தலைமையிடத்து மண்டல துணை வட்டாட்சியா் உமா மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏா்வாடி குறுவட்டத்துக்குள்பட்ட கிராமங்களுக்கு மே 16, 20 ஆகிய நாள்களிலும், பூலம் குறுவட்டத்துக்கு மே 20, மூலக்கரைப்பட்டி குறுவட்டம் மே 23, நான்குனேரி குறுவட்டம் மே 23, 27 ஆகிய நாள்களிலும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனைக்குப் பின்னா் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறையினா் தெரிவித்தனா்.