Ajith: "8 மாதங்களில் 42 கிலோ எடை குறைப்பு; டீடோட்டலராகவும் சைவம் உண்பவராகவும் மா...
IPL Playoffs : 'மும்பைக்குதான் பெரிய பிரச்னை' - எந்தெந்த அணிகள் ப்ளே ஆப்ஸூக்கு செல்லும்?
தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐ.பி.எல் போட்டிகள் மீண்டும் தொடங்கவிருக்கிறது. நடப்பு சீசனின் க்ளைமாக்ஸை எட்டிவிட்டோம். இன்னும் 13 லீக் போட்டிகள்தான் எஞ்சியிருக்கிறது. ஆனால், இன்னமும் எந்த அணியும் ப்ளே ஆப்ஸூக்கு தகுதிப்பெறவில்லை.
இன்னும் எந்த அணியும் அந்த Q மார்க்கை வாங்கவில்லை. புள்ளிப்பட்டியலில் இப்போதைய சூழல் எப்படியிருக்கிறது?எந்தெந்த 4 அணிகள் ப்ளே ஆப்ஸூக்கு தகுதிப்பெறும் என்பதைப் பற்றிய அலசல்.

இப்போதைய நிலவரப்படி, முதல் நான்கு இடங்களில் முறையே குஜராத், பெங்களூர், பஞ்சாப், மும்பை ஆகிய அணிகள் இருக்கின்றன. டெல்லி, கொல்கத்தா, லக்னோ ஆகிய அணிகள் முறையே அதற்கடுத்த 5, 6, 7 ஆகிய இடங்களில் இருக்கின்றன.
குஜராத் அணி 11 போட்டிகளில் ஆடி 8 போட்டிகளில் வென்று 16 புள்ளிகளோடு முதலிடத்தில் இருக்கிறது. இன்னும் டெல்லி, லக்னோ, சென்னை ஆகிய அணிகளுக்கு எதிராக குஜராத் மோத வேண்டும். அடுத்த 3 போட்டிகளில் தோற்றாலும் குஜராத் அந்த ப்ளே ஆப்ஸ் வாய்ப்பில் நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கும்.
ஆனால், அவர்கள் இந்த சீசனில் வெளிக்காட்டியிருக்கும் பார்முக்கு மூன்றில் ஒரு போட்டியையாவது கட்டாயம் வென்றுவிடுவார்கள். குறைந்தபட்சம் இரண்டு போட்டிகளையாவது வென்று முதல் இரண்டு இடங்களுக்குள் முடிக்க வேண்டும் என்பது குஜராத்தின் இலக்காக இருக்கும். அது சாத்தியமாகவும் அதிக வாய்ப்பிருக்கிறது.

பெங்களூரு அணியும் 11 போட்டிகளில் ஆடி 8 போட்டிகளில் வென்று 16 புள்ளிகளோடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அவர்களுக்கு கொல்கத்தா, ஹைதராபாத், லக்னோ ஆகிய அணிகளுக்கிடையேயான போட்டிகள் மீதமிருக்கிறது.
தற்போதைய பார்மின் படி பெங்களூருவுக்கு எதிராக இருப்பவர்கள் கொஞ்சம் எளிய போட்டியாளர்களாகத்தான் தெரிகிறார்கள். பெங்களூருவும் குறைந்தபட்சமாக இரண்டு போட்டிகளையாவது வென்று முதல் இரண்டு இடங்களுக்குள் தங்களை தக்கவைத்துக் கொள்ள முயல்வார்கள்.
ஆக, குஜராத்தும் பெங்களூருவும் எப்படியும் ப்ளே ஆப்ஸூக்கு தகுதிப்பெற்றுவிடும் என்ற நிலையே இருக்கிறது. மீதமிருக்கும் இரண்டு இடங்களுக்குதான் போட்டியே.

இப்போதைக்கு பஞ்சாப் அணி மூன்றாவது இடத்தில் இருக்கிறது. 11 போட்டிகளில் ஆடி 7 போட்டிகளில் வென்றிருக்கிறது. ஒரு போட்டி முடிவில்லாமல் ஒரு புள்ளியை வென்று மொத்தம் 15 புள்ளிகளில் இருக்கிறது.
இன்னும் ராஜஸ்தான், மும்பை, டெல்லி ஆகிய அணிகளை எதிர்கொள்ள வேண்டும். மும்பையும் டெல்லியும் பஞ்சாபை போலவே ப்ளே ஆப்ஸ் ரேஸில் இருக்கும் அணிகள். ஆகவே போட்டி கடுமையாகத்தான் இருக்கும். போட்டி முடிவில்லாமல் போனதால் கிடைத்திருக்கும் அந்த ஒரு புள்ளி அவர்களுக்கு கூடுதல் வாய்ப்பை கொடுக்கலாம்.

மும்பை அணி நான்காவது இடத்தில் இருக்கிறது. 12 போட்டிகளில் 7 போட்டிகளை வென்று 14 புள்ளிகளை மும்பை வென்றிருக்கிறது. இன்னும் 2 போட்டிகள் மிச்சமிருக்கிறது.
இரண்டுமே அவர்களுக்கு கடும் சவாலளிக்கும் போட்டிகள்தான். ஏனெனில், பஞ்சாபுக்கும் டெல்லிக்கும் எதிராக மும்பை ஆட வேண்டும். அந்த இரண்டு அணிகளுமே கூட ப்ளே ஆப்ஸ் ரேஸில் இருக்கின்றன.
அதேதான் டெல்லிக்கும். டெல்லி 11 போட்டிகளில் 6 இல் வென்று 1 போட்டியில் முடிவில்லாமல் போய் 13 புள்ளிகளை எடுத்திருக்கிறது. இன்னும் 3 போட்டிகள் இருக்கிறது.
குஜராத், பஞ்சாப், மும்பை ஆகிய அணிகளுக்கு எதிராக டெல்லி ஆட வேண்டும். மூன்றுமே வலுவான அணிகள். ஆக இருப்பதிலேயே மும்பைக்கும் டெல்லிக்கும்தான் பெரிய பிரச்னை இருக்கிறது.

எண்களின் படி கொல்கத்தாவுக்கும் லக்னோவுக்கும் இன்னும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், அந்த வாய்ப்பை அவர்கள் எட்டிப்பிடிப்பது சிரமமே.
இப்போதைக்கு குஜராத்தும் பெங்களூருவும் எளிதில் ப்ளே ஆப்ஸூக்கு தகுதிப்பெற்றுவிடும் நிலையில் இருக்கின்றன. மீதமிருக்கும் 2 இடங்களுக்கு பஞ்சாப், மும்பை, டெல்லி என மூன்று அணிகள் போட்டி போடுகின்றன.