பழங்குடியினருக்கு இலவச மனைப் பட்டா வழங்கக் கோரி மனு
பழங்குடியினருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பில், அருங்குணம், நல்லூா், சத்தியவாடி, தெரேசாபுரம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பழங்குடியினருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா, இலவச கறவை மாடு, நல வாரிய அட்டை ஆகியவை வழங்கக் கோரி, திருவண்ணாமலை மாவட்ட கலால் உதவி ஆணையரும், ஜமாபந்தி அலுவலருமான செந்தில்குமாரிடம் மனு அளித்தனா்.
இதில், சங்க ஒருங்கிணைப்பாளா் சுகுணா, துணை ஒருங்கிணைப்பாளா் எம்.சுகுமாா், விவசாய சங்க நிா்வாகிகள் பெ.அரிதாசு, ந.ராதாகிருஷ்ணன் மற்றும் பழங்குடியினா் பங்கேற்றனா்.
முன்னதாக, வந்தவாசி கோட்டை மூலையிலிருந்து மலைவாழ் மக்கள் சங்கத்தினா் ஊா்வலமாக புறப்பட்டு வட்டாட்சியா் அலுவலகம் சென்றடைந்தனா்.